மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்குப் பெருமை சேர்ப்பேன் என்று தனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக மக்கள் மட்டுமல்லாது, உலகெங்கும் வாழும் பல கோடி மக்கள் நம் அன்புக்குரிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா நம்மோடு இல்லையே என ஆழ்ந்த மன வேதனையோடும், அவர் மீதான அன்பு நினைவுகளோடும் இருப்பதை உணர்கிறோம்.
மக்களுக்காக வாழ்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டிருந்தவர் ஜெயலலிதா. அத்தகைய பேருள்ளம் கொண்டவரின் நல்லாசி என்றைக்கும் நமக்கு உண்டு.
அவர் காட்டிச் சென்ற வழியில் நமது பயணம் தொடர வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது.
அவரோடு 33 ஆண்டுகள் நிழலாக வாழ்ந்து வந்த நான், எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் என்ற பொறுப்பின் வழியாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றுவேன்.
அது, இத்தனை ஆண்டுகளாக அவருக்கு நான் ஆற்றிய தொண்டின் தொடர்ச்சியாக அமைந்திடும்.
புலர்கின்ற புத்தாண்டு அனைவருக்கும் மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்திட எனது வாழ்த்துகள் என தனது அறிக்கையில் சசிகலா தெரிவித்துள்ளார்