திறமையான நடிகைகளால் தான் சினிமாவில் நிலைக்க முடியும்: தமன்னா சொல்கிறார்

“நயன்தாரா, திரிஷா, கரீனாகபூரை போன்று திறமையான நடிகைகளால்தான் சினிமாவில் நிலைக்க முடியும்” என்று தமன்னா கூறினார்.

இதுகுறித்து ஐதராபாத்தில் நடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-

“எனது கட்டுக்கோப்பான உடல் அழகுதான் எனக்கு ‘பலம்.’ சினிமாவில் அறிமுகமானதில் இருந்து ஒரே மாதிரி தோற்றத்தில் இருக்கிறீர்களே? இதற்கு என்ன சாப்பிடுகிறீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். கேரளாவை சேர்ந்தவர்கள் காப்பியுடன் நெய்யையும் சேர்த்து குடிக்கிறார்கள். நான் காப்பி அல்லது பிளாக் காப்பியுடன் வெண்ணெயை கலக்கி குடிக்கிறேன்.

நிறைய காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்கிறேன். முட்டை சாப்பிடுகிறேன். பருப்பு வகைகளை தொடுவது இல்லை. உடற்பயிற்சிகளும் செய்கிறேன். இதுதான் எனது அழகு ரகசியம். வீட்டில் இருக்கும்போது, ‘மேக்கப்’ போட மாட்டேன். பைஜாமா அணிவேன். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது புடவை கட்டிக் கொள்வேன்.

புடவைதான் சவுகரியமான உடையாக இருக்கிறது. சினிமாவில் உடை விஷயங்களில் சில நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன. சினிமா வேறுமாதிரியான உலகம். இங்கு மனதில் இருப்பதை மறைத்து வெளியில் சிரித்து பேச வேண்டும் என்று கற்று இருக்கிறேன். சினிமா என்பது ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. நானும் அந்த தாக்கத்தில்தான் நடிகையானேன்.

ஆனாலும் நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதையெல்லாம் விட்டு விட வேண்டும். சினிமாவில் அனுஷ்காவுடன் எனக்கு நெருக்கமான நட்பு இருக்கிறது. உடை விஷயங்களில் அவரிடம்தான் ஆலோசனைகள் கேட்பேன். சினிமாவில் 5 வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக நீடிப்பது அபூர்வம். திறமையான நடிகைகளால் மட்டும்தான் நிலைக்க முடியும்.

நயன்தாரா, திரிஷா, காஜல், கரீனாகபூர் உள்ளிட்ட நடிகைகள் தங்கள் திறமையால்தான் 10 வருடங்களை தாண்டியும் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். எனக்கு திருமணம் எப்போது? என்று கேட்கிறார்கள். திருமணம் என்பது சிறந்த பந்தம். அதை மதிக்கிறேன். ஆனால், இப்போது திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.

சினிமாவில் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. மனதுக்கு பிடித்தவரை சந்தித்தால் பெற்றோர்களிடம் சொல்லி அவர்கள் சம்மதித்தால் திருமணம் செய்து கொள்வேன். அப்படி ஒருவர் கிடைக்காவிட்டால் பெற்றோர்கள் நிச்சயம் செய்யும் மாப்பிள்ளையை மணப்பேன். படப்பிடிப்புகள் இல்லாதபோது எனது தந்தையுடன் இணைந்து நகை வியாபாரம் செய்கிறேன்.”

இவ்வாறு தமன்னா கூறினார்.