மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர மோசடி குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை: ஜனாதிபதி!!

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர மோசடி சம்பந்தமாக சட்டத்தை அமுல்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தான் கடுமையான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் பிணை முறிப்பத்திர விவகாரத்தில் எவருக்கும் சலுகையை வழங்க தயாரில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகாரம் சம்பந்தமான கோப் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, சபாநாயகர் மூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர், அது சம்பந்தமாக சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்த விசேட ஆணைக்குழுவை நியமிப்பதா இல்லை என்பது குறித்து கோப் அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.