ஒட்டாவா பிரகடனம் என அழைக்கப்படும் கண்ணிவெடிகளைத் தடை செய்யும் உடன்பாட்டில் கையெழுத்திடுவதாக அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஒன்று எழுந்திருக்கிறது.
160 நாடுகள் வரை கையெழுத்திட்டுள்ள இந்த சர்வதேச உடன்பாட்டில் மகிந்த ராஜபக்ச அரசாங்கமும் அதற்கு முன்னர் பதவியிலிருந்த அரசாங்கங்களும் கையெழுத்திடுவதற்கு வெளிப்படையாகவே மறுத்து வந்தன.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்டு வந்த போர் தான் அதற்குக் காரணம்.
போரில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினரும் இராணுவத்தினருக்கு எதிராக விடுதலைப் புலிகளும் கண்ணிவெடிகளை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.
போரில் கண்ணிவெடிகள் ஒரு முக்கியமான தாக்குதல் மற்றும் தற்காப்பு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டன.
நான்காவது கட்ட ஈழப்போர் வரையில் ஆளணி பற்றாக்குறை இரண்டு தரப்புகளுக்குமே முக்கியமானதொரு சிக்கலாக இருந்து வந்தது.
வரையறுக்கப்பட்டளவு ஆளணியைக் கொண்டு பெரும் பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியிருந்ததால் இரண்டு தரப்புகளுக்குமே கண்ணிவெடிகள் தான் கவசமாக இருந்தன.
புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் இராணுவத்தினர் தமது முகாம்கள், தளங்களின் பாதுகாப்புக்காகவும் கண்ணிவெடிகளையே தமது முதல் தற்காப்பு கவசமாக பயன்படுத்தி இருந்தன.
அதைவிட எதிர்த்தரப்பின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அதிர்ச்சித் தாக்குதல்களை நடத்தி நிலைகுலைய வைப்பதற்கும் கண்ணிவெடிகளை இரண்டு தரப்புகளுமே பயன்படுத்தி வந்தன.
இராணுவத் தரப்புக்கு நான்காவது கட்ட ஈழப்போர் வரையில் ஆளணி பற்றாக்குறை இருந்தது. புலிகளைப் பொறுத்தவரை கடைசிவரையில் அந்தச் சிக்கல் நீடித்தது.
அதனால் அவர்கள் கண்ணிவெடிகளின் பயன்பாட்டை கைவிடுவதற்குத் தயாராக இருக்கவில்லை.
புலிகள் ஓர் அரசு அல்லாத தரப்பாக இருந்தனர். அதனால் அவர்கள் கண்ணிவெடிகளைப் பயன்படுத்தும் போது தாம் எவ்வாறு அதனைப் பயன்படுத்துவதை தடுக்கும் உடன்பாட்டில் கையெழுத்திட முடியும் என்று கேள்வி எழுப்பியது.
அரசாங்கம் இந்த இழுபறியால் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் முதல் ஆட்சிக் காலம் வரையில் ஒட்டாவா உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.
போர் முடிந்த பின்னர் ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கமும் கண்ணிவெடிகளை தடைசெய்யும் ஒட்டாவா உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு மறுப்புத் தெரிவித்து வந்தது.
எனினும் கடந்த ஆண்டு இறுதியில் ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்ரமசிங்க கூட்டு அரசாங்கம் முன்னைய அழுங்குப்பிடியில் இருக்கவில்லை.
பதவிக்கு வந்த தொடக்கத்தில் சர்வதேச ஆதரவை தமக்கு ஆதரவாக திருப்பிக் கொள்வதிலேயே இந்த அரசாங்கம் கவனம் செலுத்தியது.
ஏனென்றால் எல்லாப் பக்கங்களிலும் விரோதத்தை ஏற்படுத்தியிருந்த ஒரு வெளிவிவகாரக் கொள்கையைத் தான் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் விட்டுச் சென்றிருந்தது.
எனவே சர்வதேச ஆதரவைப் பெற்றுக் கொள்வதன் மூலமே ஜெனிவா நெருக்கடி, போர்க்குற்ற விசாரணை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சமாளிக்க முடியுமென்ற நிலை காணப்பட்டது.
அதனால் சர்வதேச தரப்புகளால் முன்வைக்கப்பட்ட பெரும்பாலான நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக அரசாங்கம் இணங்கியது. அவ்வாறு இணங்கப்பட்ட ஒன்றுதான் ஒட்டாவா உடன்படிக்கை.
கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் திகதி கனடாவின் நிதியுதவியுடன் கண்ணிவெடிகள் அகற்றப்படும் மடுப் பிரதேசத்துக்கு கனேடியத் தூதுவர் ஷெல்லி வைற்றிங்குடன் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கண்ணிவெடிகளைத் தடை செய்யும் ஒட்டாவா பிரகடனத்தில் இலங்கையும் கையெழுத்திடும் என்று முதல்முறையாக வாக்குறுதியை அளித்திருந்தார்.
அதற்குப் பின்னர் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் கண்ணிவெடிகளை தடை செய்யும் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு அனுமதி கோரும் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அமைச்சரவையும் அதற்கு அனுமதியைக் கொடுத்திருந்தது.
ஆனாலும் இன்று வரையில் அந்த உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு அரசாங்கம் முன்வரவில்லை. இதற்குக் காரணம் பாதுகாப்பு அமைச்சு தான். ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்து இடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு இன்னமும் பச்சசைக்கொடியைக் காண்பிக்கவில்லை.
இலங்கை அரசாங்கத்தின் முடிவில் வெளிவிவகாரக் கொள்கையில் பாதுகாப்பு அமைச்சு இன்னமும் செல்வாக்கு செலுத்தும் நிலையில் இருக்கிறது என்பதற்கு இந்த விடயமும் ஓர் உதாரணம்.
வரும் மே மாதத்துடன் போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகளாகப் போகின்ற நிலையிலும் கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு இலங்கை பின்னிற்கிறது.
முன்னர் விடுதபை் புலிகளைக் காரணம் காட்டியே இலங்கை அரசாங்கம் இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு மறுத்தது.
விடுதலைப் புலிகள் கண்ணிவெடிகளைப் பயன்படுத்தும் போது இராணுவத்தினர் அதனைப் பயன்படுத்தாமல் தடுப்பது நியாயமற்றது என்று வாதிடப்பட்டது.
ஆனால் இப்போது விடுதலைப் புலிகளும் இல்லை. போரும் இல்லை, இருந்தாலும் கண்ணிவெடிகளின் பயன்பாட்டைத் தடை செய்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என்பதே அரசாங்கத்தின் இப்போதைய நிலைப்பாடு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்திருந்தாலும் பாதுகாப்பு அமைச்சு அதற்கு பச்சசைக்கொடி காண்பிக்கவில்லை என்று பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சி கூறியிருக்கிறார்.
இதற்காக பாதுகாப்பு அமைச்சு இன்னமும் இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு முட்டுக்கட்டை போடுகிறது என்பது சர்சசைக்குரிய கேள்வியாகவே இருக்கிறது.
இராணுவ முகாம்களைப் பாதுகாப்பதற்காக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
போர் முடிந்து 8 ஆண்டுகள் ஆகப்போகின்ற நிலையில் யாரிடமிருந்து இராணுவ முகாம்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது என்ற கேள்வி எழுகிறது.
அது மாத்திரமன்றி வெறும் கண்ணிவெடிகளின் பாதுகாப்புடன் மாத்திரம் தானா இராணுவ முகாம்கள் இருந்தன என்ற கேள்வியும் எழுகிறது.
போர் இல்லாத சூழலில் கூட கண்ணிவெடிகளின் பாதுகாப்பில் தான் இராணுவ முகாம்கள் இருக்கின்றன என்று கூறுவது இராணுவத்தினரின் போர்த்திறனுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் என்பதைக்கூட பாதுகாப்புச் செயலர் கவனத்தில் கொள்ளவில்லை.
2 லட்சத்துக்கு மேற்பட்ட படையினரையும் நவீன ஆயுதத் தளபாடங்களையும் மிகச் சிறந்த புலனாய்வுக் கட்டமைப்பையும் கொண்டிருக்கின்ற ஒரு இராணுவம் தனது முகாம்களின் பாதுகாப்புக்கு கண்ணிவெடிகளில் தங்கியிருப்பதாக கூறுவது எளிதில் நம்பக்கூடிய விடயமாகத் தோன்றவில்லை.
கண்ணிவெடிகளால் தமது இராணுவ நிலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உலகின் ஒரே நாடு இலங்கை தான் என்று கண்ணிவெடிகளைத் தடை செய்யும் இலங்கை பிரசார அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இறுதிப் போரில் கூட வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக கண்ணிவெடிகள் இருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
போருக்குப் பின்னர் கண்ணிவெடிகளால் 99 சதவீதம் பெண்களும் சிறுவர்களுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வஜிர அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அரசாங்கமோ இந்த வாதங்களை ஏற்றுக்கொண்டாலும் ஒட்டாவா உடன்பாட்டில் இப்போதைக்கு கையெழுத்திடுவதற்கு தயாராக இல்லை.
இலங்கைக்கு இப்போது அதிகம் நெருக்கமாக உள்ள அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளும் கூட இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடவில்லை என்பது அரசாங்கத்துக்கு தெம்பான ஒரு விடயம் தான்.
இந்த நாடுகளிடமிருந்து அரசாங்கம் ஒட்டாவா பிரகடனம் குறித்த அழுத்தங்களையும் எதிர்கொள்ளவில்லை. அதுகூட இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தை இழுத்தடிப்பதற்கு ஒரு காரணம்.
ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்திடுவதாக அளித்திருந்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றும் நிலையில் அரசாங்கம் இல்லை என்பது இப்போது உறுதியாகியிருக்கிறது.
இப்போது அரசாங்கத்துக்கு வெளிநாடுகளில் எதிரிகளே இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவே கூறியிருக்கிறார்.
அப்படியானதொரு நிலையில் சர்வதேசத்தைத் திருப்திப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டியதில்லை என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்துள்ளது.
2015ல் வெளிளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விகரமசிங்கவும் வெளிநாடுகளில் ஓடி ஓடி அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாத நிலையிலேயே 2016ம் ஆண்டு கழிந்து போயிருக்கிறது.
அவ்வாறு நிறைவேற்றப்படாத, நிறைவேற்றுவதற்கு இழுத்தடிக்கப்படும் வாக்குறுதிகளில் ஒன்றாகத் தான் கண்ணிவெடிகளைத் தடை செய்யும் ஒட்டாவா பிரகடனமும் அமைந்திருக்கிறது.
அரசாங்கம் தனது நிலைப்பாட்டுக்கு எத்தகைய காரணத்தைக் கூறினாலும் வாக்குறுதியை மீறுவதில் மகிந்த ராஜபக்ச காலத்திலிருந்து தொடர்ந்து வரும் பாரம்பரியத்திலிருந்து இலங்கை இன்னமும் விடுபடவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.