நாட்டு மக்களின் அவநம்பிக்கை களைய வேண்டும்! சந்திரிகா

நாட்டு மக்களாகிய நாம் ஒருவருக்கொருவரிடையில் பிரிவு மற்றும் அவநம்பிக்கை களைய வேண்டும் என்று முன்னாள் ஐனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புத்தாண்டின் வரவைக் கொண்டாடும் இச் சந்தர்ப்பத்தில் இன்றைக்கு ஈராண்டுகளுக்கு முன்பு மிக அமைதியான முறையில் புதிய ஜனாதிபதி ஒருவரை நியமித்துக் கொண்டோம்.

அதே ஆண்டு ஓகஸ்ட் மாதம் நல்லாட்சி, நீதி மற்றும் நேர்மையான சமூகம் ஒன்றை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இரு பிரதான கட்சிகளின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட கூட்டரசாங்கத்திற்கு மக்கள் ஆணையைப் பெற்றுத்தந்தனர்.

இதன்மூலம், இலங்கையர்களான எங்களது அரசியல் புத்திசாதுரியம், முதிர்ச்சித் தன்மை என்பன மிகவும் தெளிவாக வெளிக்காட்டப்பட்டதினை எண்ணி மீண்டும் ஆறுதலடைய முடியும்.

குடி மக்களாகிய நாம் ஒருவருக்கொருவரிடையில் பிரிவு மற்றும் அவநம்பிக்கை என்பவற்றை உருவாக்கி அதை மனதில் பதிவதற்கு மேற்கொள்ளும் முயற்சியைத் தோற்கடித்து, எங்களது பன்முகத் தன்மையை வளமொன்றாகவும் சக்தியாகவும் காணக் கூடிய சமுதாயம் ஒன்றை உருவாக்க வேண்டியுள்ளது.

நல்லாட்சி மற்றும் சட்டத்தின் ஆதிக்கம் என்பவற்றை மீளவும் நிலைநாட்டுவதன் மூலம் ஒரே இனமாக நாட்டின் சகல குடிமக்களும் சம உரிமைகளை அனுபவித்துக் கண்ணியமாக வாழ முடியுமான ஐக்கிய மற்றும் நியாயமான இலங்கை ஒன்றை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் மிகவும் தெளிவாக அர்பணிப்புச் செய்துள்ளனர்.

சகல குடிமக்களுக்கும் தங்களது எதிர்காலத்தைக் கட்டியெழுப்பக் கூடிய, எனது நாடு என்று பெருமைப்படக் கூடியதான ஒரு நாட்டை கட்டியெழுப்புவதை முன்நோக்காகக் கொண்டு, எல்லோரும் ஒற்றுமையுடனும் பன்முகத் தன்மைக்கு மதிப்பளித்தும் வாழக் கூடியதுமான சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் சகல வழிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

உதயமாகும் 2017 புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் அமைதி, சுகவாழ்வு, மகிழ்ச்சி மற்றும் செயற்திறன் மிக்க ஆண்டாக அமைய வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.