நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய சரத்துக்கள் புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளை நேற்று முன்தினம் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட வேளையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில். உத்தேச புதிய அரசியல் அமைப்பு எந்த வகையிலும் நாட்டை பிளவடையச் செய்யும் ஆவணமாக அமையாது.
இந்த புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் சில தரப்பினர் எவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்தினாலும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கோ அல்லது பௌத்த மதத்திற்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
எனது ஆட்சிக் காலத்தில் நாட்டுக்கு பாதகமான எந்தவிதமான தீர்மானங்களும் எடுக்கப்படாது. மாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதம் இன்றி புதிய அரசியல் அமைப்பினை உருவாக்குவதற்கு அரசாங்கம் தயாரில்லை.
மக்கள் பிரதிநிதிகள், நிபுணர்கள் மட்டுமன்றி பொதுமக்களிடமும் கருத்துக்கள் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.