மஹிந்தவின் மெய்ப்பாதுகாவலர்களின் கொடுப்பனவுகள் 2016 ஏப்ரல் முதல் நிறுத்தம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கும் 206 பேரின் ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் 2016 ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்தவின் பாதுகாப்புக்கு 206 பொலிஸ் உத்தியோகத்தர்களைக்கொண்ட செயலணியொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பிரமுகர்களின் பாதுகாப்புக்கு நியமிக்கப்படுபவர்களுக்கு அவர்களது அடிப்படைச் சம்பளத்தின் 33% ஊக்குவிப்புக் கொடுப்பனவாக வழங்கப்படுவது வழக்கமாகும்.

எனினும், மஹிந்தவின் பாதுகாப்பு அணிக்கு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளது.

சாதாரண பொலிஸ் சேவையிலுள்ளவர்கள் மீண்டும் பரீட்சிக்கப்பட்டு அவர்களது உடல் ஆரோக்கியம் மற்றும் விசேட திறமைகளின் அடிப்படையிலேயே பிரமுகர்கள் பாதுகாப்புஅணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அவர்களது அடிப்படைச் சம்பளத்துக்கு மேல் ஒருசில ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளும் விசேட படிகளும் வழங்கப்படுவது வழக்கமாகஇருந்தபோதிலும் மஹிந்தவின் பாதுகாப்பு அணியினருக்கு இந்தக் கொடுப்பனவுகள்இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பாதுகாவலர்களுக்கு இந்த ஊக்குவிப்பு மற்றும் விசேட கொடுப்பனவுகள் அனைத்தும் வழங்கப்பட்டு வந்தபோதிலும் மஹிந்தவின் பாதுகாவலர்களுக்கு ஓரவஞ்சனை செய்யப்படுவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.