நாம் ஒவ்வொருவரும் நல்லது செய்ய முயன்றால் 2017-ம் ஆண்டு நன்றாக இருக்கும்: போப் ஆண்டவர் ஆசி

புத்தாண்டு பிறப்பையொட்டி, போப் ஆண்டவர் பிரான்சிஸின் உரையை கேட்பதற்காகவும், ஆசியை பெறுவதற்காகவும் நேற்று வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடினர். அவர்களிடையே போப் ஆண்டவர் பேசினார்.

அப்போது அவர், “கடவுளின் கருணையால் நாம் ஒவ்வொருவரும் நல்லது செய்ய முயன்றால், 2017-ம் ஆண்டு நன்றாக இருக்கும். வெறுப்புணர்வையும், வன்முறையையும் ஒதுக்கித் தள்ளுங்கள். சகோதரத்துவத்தையும், இணக்கத்தையும் ஆதரியுங்கள்.

துரதிருஷ்டவசமாக, இந்த நாளில் கூட துருக்கி நாட்டில் வன்முறை சம்பவம் நடந்துள்ளது. துருக்கி மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறேன்.

இந்த நேரத்தில், உலகத்தையே அச்சத்தின் பிடியில் வைத்திருக்கும் தீவிரவாதத்துக்கு எதிராக போராடி வருபவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்” என்றார்.