தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு குஷ்பூ போட்டி: விஷால் அறிவிப்பு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த தேர்தல் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது. இதில் தலைவராக எஸ்.தாணு, செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர்களாக கதிரேசன், தேனப்பன், பொருளாளராக டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பில் உள்ளனர்.

இவர்களின் பதவிக் காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் பிப்ரவரி மாதம் நடக்கிறது.

இந்த தேர்தலில் 3 அணிகள் போட்டியிட தயாராகி வருகின்றன. ஒரு அணி சார்பில் சங்கத்தின் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர் போட்டியிடுகிறார். இன்னொரு அணியில் டி.சிவா, தனஞ்செயன் உள்ளிட்ட சிலர் போட்டியிடுகிறார்கள். இதேபோல் விஷால் தரப்பும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.

இந்நிலையில் விஷால் தரப்பில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு குஷ்பூ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து வாழ்த்து தெரிவித்து, குஷ்பூ தலைவர் பதவிக்கு போட்டியிடும் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

விஷால் தரப்பில் போட்டியிடும் மற்ற நிர்வாகிகளுக்கான வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தெரிகிறது.