சசிகலா, தீபாவை தொடர்ந்து ரஜினிகாந்த்! போஸ்டரால் பரபரப்பு!!

சென்னையில் ரஜினியை அரசியலுக்கு அழைத்து ரசிகர்கள் வைத்துள்ள போஸ்டர்கள் பரபரப்பை கிளப்பியுள்ளன.

புகழ்பெற்ற அரசியல் தலைவர்களுள் சிறந்த பெண் தலைவராக இருந்தவர் ஜெயலலிதா.

கடந்த மாதம் ஜெ. உடல்நிலை மோசமான நிலையில் உயிரிழந்தார். இவரது இறப்பு தமிழக மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இவர் இறந்த சில தினங்களிலேயே அதிமுக கட்சிகளில் சிக்கல்கள் ஏற்பட தொடங்கின.

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா இருக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், ஜெ.வின் அண்ணன் மகள் தீபா தலைமை ஏற்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும் மாறி மாறி ஆதரவு தெரிவித்து போஸ்டர்கள், பேனர்கள் என வைத்துக் கொண்டிருந்தனர்.

இறுதியாக, கடந்த மாதம் 29 ஆம் திகதி அதிமுக பொதுக் குழுவில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பை ஏற்றுக் கொண்டு அதிமுகவை வழி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், திடீரென ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று, சென்னை, திருச்சி உட்பட பல நகரங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, திருச்சி மாவட்ட ரஜினி மன்ற அமைப்பாளர் ராயல் ராஜு கூறுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகச் சிறந்த அரசியல் தலைவர். அவர் இல்லாதது தமிழக அரசியலில் வெற்றிடமாக உள்ளது.

இந்த வெற்றிடத்தை மக்கள் செல்வாக்கு நிறைந்த ரஜினியால் மட்டுமே நிரப்ப முடியும்.

தமிழகத்தில் வற்றாத நதி போல ஓடிக் கொண்டிருக்கும் லஞ்சமும், வன்முறையும் மாநிலத்தையே சீர்குலைத்துள்ளது.

ரஜினி அரசியலுக்கு வந்தால் லஞ்சமும், வன்முறையும் முற்றிலுமாக ஒழிக்கப்படும். அரசியலுக்கு வர இதுவே சரியான தருணம் ஆகும்.

எனவே, விரைவில் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து ரஜினி மன்ற நிர்வாகிகளும் ரஜினியை சென்னையில் நேரில் சந்தித்து எங்கள் நியாயமான கோரிக்கையை தெரிவிக்க உள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் நீண்ட காலமாகவே வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் அவர் இதுவரை இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

இருந்த போதிலும், இன்றைய அரசியல் சூழ்நிலையில் ரஜினி ரசிகர்களின் திடீர் போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.