கல் வீடுதான் வேண்டும்: வலியுறுத்தும் கூட்டமைப்பு!

வீட்டுத் தேவையுள்ள மக்கள் பொருத்து முன்நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்ட விண்ணப்பங்களை நிராகரியுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளது.

கல் வீடே எமக்கு வேண்டும் என பிரதேச செயலரிடம் எழுதிக் கொடுங்கள். மீள்குடியேற்ற அமைச்சரின் தவறான வழிநடத்தலுக்குப் பலியாகிப் பின்னர் மனம் வருந்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சோ.சேனாதிராஜா இது தொடர்பில் அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவது,

பொருத்து வீட்டுத் திட்டத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்திருந்தது. இந்த வீட்டுத் திட்டத்தின் ஊழல்கள், முறைகேடுகள் தொடர்பில் நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்தது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வைக் காணுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எமக்கு உறுதியளித்திருந்தார். அத்துடன் 8 இலட்சம் ரூபா வீட்டுத் திட்டம் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுகின்றது.

ஆனால், அமைச்சர் சுவாமிநாதன் கல் வீடு கட்ட, மண்ணில்லை, கல்லில்லை என்று அற்ப காரணங்களைச் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றார்.

இந்த விடயத்தில் பிரதமர் நடவடிக்கை எடுப்பதாக, தீர்வைக் காணுவதாகச் சொன்ன பின்னரும், முன்நிர்மாணிக்கப்பட்ட வீட்டுக்கு அமைச்சர் சுவாமிநாதன் விளம்பரம் செய்வது தவறானதாகும்.

ஏன் இவ்வளவு அவசரம். அமைச்சர் சுவாமிநாதனின் விசுவாசிகளும் முகவர்களும் இணைந்து மாவட்ட செயலர்களையும், பிரதேச செயலர்களையும், ஊழியர்களையும் மிரட்டி, அச்சுறுத்திப் பொருத்து வீடுகளை ஏற்க வேண்டும் என்று பேசுகின்ற செய்திகளும் கசிந்திருக்கின்றன.

வீட்டுத் திட்டம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி பொருத்தமான தீர்மானங்களை எடுக்க வேண்டும். அமைச்சர் சுவாமிநாதனின் மீள்குடியேற்ற அமைச்சில் ஓராண்டுக்குள் இரண்டு செயலாளர்கள் துரத்தப்பட்டுள்ளனர்.

அமைச்சுக்கு இன்னுமொரு செயலாளர் நியமிக்க முடியவில்லை. அரச செயலாளர் தரமுள்ளவர்கள் இந்த அமைச்சுக்கு வர மறுக்கின்றனர்.

பொருத்து வீட்டுத் திட்டத்தை 21 இலட்சத்தில் இருந்து 16 இலட்சமாகக் குறைத்து, அமைச்சர் சுவாமிநாதன் விளம்பரம் பிரசுரித்து ஒப்பேற்ற எடுக்கும் நடவடிக்கையில் மறைந்திருக்கும் மர்மம் தான் என்ன?

அரசையும், தமிழ் மக்களையும் அமைச்சர் சுவாமிநாதன் தவறாக வழிநடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.