யாழில் பொருத்து வீட்டை மக்களிடம் கையளிக்கும் செயற்பாடு தீவிரம்..!

முன்நிர்மாணிக்கப்பட்ட பொருத்து வீட்டை மக்களிடம் கையளிக்கும் செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வலிகாமம் வடக்கில் மீள்குடியமர்வுக்கு அண்மையில் அனுமதிக்கப்பட்ட பிரதேசங்களில் இதற்கான பரப்புரைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முன்நிர்மாணிக்கப்பட்ட பொருத்து வீட்டை வழங்குவதற்கு மீள்குடியேற்ற அமைச்சு முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.

இந்த வீட்டுத் திட்டம் வடக்கு, கிழக்கு மக்களுக்குப் பொருத்தமானது இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்துள்ளது. கல் வீடுகளே நிர்மாணித்து வழங்க வேண்டும் என அந்தக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், விடாப்பிடியாக இந்த வீட்டுத் திட்டத்தை முன்னெடுத்தேத் தீருவேன் என தெரிவித்துள்ளார்.

வலிகாமம் வடக்கில் மக்கள் மீள்குடியேறுவதற்கு அண்மையில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற இனந்தெரியாத சிலர், தாம் திணைக்களத்திலிருந்து வருகின்றோம். முன்நிர்மாணிக்கப்பட்ட வீட்டுக்கு விண்ணப்பியுங்கள் என கோரியுள்ளனர்.

மேலும், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்துக்குரிய அரசியல் வாதி ஒருவர், மாவட்ட நிர்வாகங்களுடன் தொடர்புகொண்டு, முன் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டத்துக்கான விண்ணப்பப் படிவங்களை பிரதேச செயலகங்களுக்கு அதிகமாக விநியோகிக்குமாறு கோரியுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.