சசி உன்னை மக்கள் ஏத்துக்கணும் ! குடும்ப தலையீட்டை தடுக்கணும்! நடிகை லதா.!

சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக வந்துள்ளது வரவேற்க தக்கதுதான். அதே சமயத்தில் அவா் குடும்பத்தினரின் தலையீட்டை தடுக்க வேண்டும்.

கட்சி நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டது போல மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் சினிமாவுக்கு வர காரணம் எம்.ஜி.ஆா் தான். அவா் என்னை திரையில் அறிமுகம் செய்தவர்.

அ.தி.மு.க ஆரம்பித்தபோது, அந்த கட்சிக்காக பல மாவட்டங்களில் நாட்டிய நிகழ்ச்சி நடத்தி நிதி வசூல் செய்து எம்.ஜி.ஆரிடம் கொடுத்துள்ளேன்.

அதன் பிறகு திரைப்படங்களில் அதிகமான வாய்ப்புகள் வந்ததால் அரசியலில் முழுமையாக ஈடுபட முடியவில்லை.

எம்.ஜி.ஆரே இரண்டு முறை ‘கட்சிக்குள் வரவேண்டும்’ என்றுகேட்டார். அந்த நேரத்தில் என்னால் முடியவில்லை. அவர் மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சியில் குழப்பங்கள் ஏற்பட்டு இருந்தது.

அதனால் நான் அமைதியாக இருந்தேன். திருநாவுக்கரசர் கட்சி ஆரம்பிக்கும்போது என்னை வந்து சந்தித்து அவர் கட்சிக்கு அழைத்ததால் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வின் மூலம் என் அரசியல் பயணம் தொடங்கியது.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி. அந்த கட்சியின் செல்வாக்கு குலைந்துபோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அந்தக் கட்சி நிர்வாகிகள் நல்ல முடிவை எடுக்க வேண்டும். என்னுடைய ஆசான் எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி. அந்தப் புகழை இனி வருபவர்கள் பாழாக்காமல், அவர் இந்தக் கட்சியை வழிநடத்தியது போன்று சிறப்பாக வழிநடத்த வேண்டும்.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு அந்தக் கட்சி கலகலத்து போய்விடும் நிலை ஏற்பட்டது. ஆனால், அதை சீர்படுத்தி தூக்கி நிறுத்தி கட்சியை ஒரு ராணுவ மிடுக்காக நடத்தியவர் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆருக்கு இருந்த மக்கள் சக்தி ஜெயலலிதாவுக்கும் இருந்தது. அதனால்தான் தொடர்ச்சியாக இரண்டு முறை முதல்வராக வரமுடிந்தது.

கட்சியை நல்ல நிலைக்கு ஜெயலலிதா கொண்டு வந்து விட்டுள்ளார் என்பதை மறுக்கமுடியாது.

எம்.ஜி.ஆரை கட்சியினர் எளிதாக சந்திக்க முடிந்தது. ஜெயலலிதா அதில் கொஞ்சம் மாறுபட்டார். கடைசிவரை இரும்பு மனுஷியாகவே தன்னைக் காட்டிக்கொண்டார்.

அப்படி இருந்தால்தான் கட்சியை கட்டுக்கோப்பாக நடத்த முடியும் என்று அவர் நினைத்து இருக்கலாம்.

மக்கள் ஏற்றுக்கொள்ளாத முடிவை கட்சியினர் யாரும் எடுக்கக்கூடாது. யாருடைய தகுதியையும் நாம் குறைவாக எடைபோட முடியாது.

ஜெயலலிதாவோடு பல ஆண்டுகள் இருந்தவர். கட்சியை நடத்தும் முறை குறித்து பார்த்திருப்பார்.

சசிகலாவைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஒரு சில முறை பார்த்துள்ளேன். அவ்வளவுதான். ஆனால், அவர் செயல்பாடுகளை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

மக்களுக்காக உழைக்கவேண்டும்’ என்ற எண்ணத்தில் செயல்பட வேண்டும். அவரது குடும்பத்தினர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தமிழக அரசியல் மிகவும் குழப்பமாக உள்ளது. அந்தக் குழப்பம் தீரவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.

இந்த ஆட்சி நான்கு ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறவேண்டும். ஜெயலிலதா கட்டுக்கோப்பாக ஆட்சியை நடத்தியதுபோல் இவர்களும் நடத்தவேண்டும்.

ஜெயலலிதா இல்லாத அதிமுக இப்போது வெற்றிடமாக இருப்பதாகத் தான் நானும் உணா்கிறேன். இவ்வாறு நடிகை லதா தெரிவித்துள்ளார்.