துயர் தீர்க்கும் திரவுபதி அம்மன் ஆலயம்!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புத்தூர். இங்குள்ள அரசு மருத்துவமனை அருகே இருக்கிறது திரவுபதி அம்மன் ஆலயம்.

மகாபாரதத்தின் நாயகி திரவுபதி. துருபதன் என்ற மன்னன் பாஞ்சாலதேசத்தில் நல்லாட்சி செய்து வந்தான். ஆனால் அவனுக்கு வாரிசு இல்லை. தனக்கு வாரிசு வேண்டியும், துரோணரை அழிப்பதற்காகவும் ஒரு பெரிய யாகம் செய்தான். அந்த யாகத்தில் அவனுக்கு ஒரு மகனும், மகளும் தோன்றினார்கள். மகனுக்கு துஷ்டத்துய்மன் என்றும், மகளுக்கு திரவுபதி என்றும் பெயரிட்டார்.

திரவுபதி முற்பிறவியில் நளாயினியாகப் பிறந்தவள். மறு பிறவியில் காசி ராஜனுக்கு மகளாகப் பிறந்து சிவபெருமானை நோக்கி தவமிருந்தாள். அவளது தவத்தைக் கண்டு மனம் இரங்கிய சிவபெருமான் அவள் முன் தோன்றினார்.

‘பெண்ணே, உன் தவத்திற்கு மெச்சினோம். என்ன வரம் வேண்டும்? கேள்” என்றார் சிவபெருமான்.

ஈசனைக் கண்ட மகிழ்விலும், பதற்றத்திலும், அவள் தன்னை மறந்து ‘பதம் தேஹி’ என ஐந்து முறை கூறினாள்.

‘மறுபிறவியில் உனக்கு அந்த பாக்கியம் கிட்டும்’ என அருள்புரிந்து மறைந்தார் ஈசன். அதன்படியே துருபதன் நடத்திய வேள்வியில் திரவுபதியாக உருக்கொண்டாள்.

கன்னிப் பருவம் அடைந்ததும் அவள், சுயம்வரம் மூலமாக அர்ச்சுனனை மணந்தாள். பின், அர்ச்சுனன் உள்ளிட்ட பஞ்ச பாண்டவர்களும் குந்திதேவியை சந்திக்கச் சென்றனர். பஞ்ச பாண்டவர்கள் வீட்டில் வாசலில் நின்றபடி, ‘தாயே! கனி கொண்டு வந்துள்ளோம்’ என குந்தியிடம் கூற, குந்தியும் திரும்பி பாராது ‘பகிர்ந்து உண்ணுங்கள்’ என்றாள். பின் கனிக்குப் பதிலாக திரவுபதி இருப்பதைக் கண்ட குந்திதேவி பதறினாள்.

அப்போது குந்தியின் முன் தோன்றிய நாரதர், ‘திரவுபதி முற்பிறவியில் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தாள். அந்த தவத்தின் பலனாக ஐந்து சிவ கணங்களும் அவளுக்கு கணவர்களாக இப்போது வாய்த்துள்ளனர்’ என்றார்.

திரவுபதியும் ஐவரையும் சிவ சக்தியாக மணந்து பராசத்தியாக வாழ்ந்தாள்.

பாரதப்போர் நடந்து கொண்டிருந்த போது, கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்கு திரவுபதி காளியின் வடிவம் என்பதை உணர்த்தினார்.

தருமர் சூதாடி திரவுபதியை இழந்தார். துச்சாதனன் துரியோதனனின் பேச்சைக் கேட்டு, திரவுபதியை துகிலுரித்தான். சினம் கொண்டாள் திரவுபதி. ‘பாண்டவர்கள் கவுரவர்களை போரில் வென்ற பின்பே தன் கூந்தலை முடிவேன்’ என சபதம் செய்தாள். இப்படி தெய்வீக சக்தியாக வாழ்ந்த திரவுபதிக்கு, நம் நாட்டில் நிறைய ஆலயங்கள் உள்ளன. அப்படிப்பட்ட ஆலயம் ஒன்றுதான் புத்தூரில் உள்ள திருத்தலம்.

ஆலய அமைப்பு :

இந்த ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. அழகிய முகப்பைக் கடந்து உள்ளே சென்றால், மலர் செடிகளின் அணிவகுப்பைப் பார்க்கலாம். அடுத்து இன்னொரு அழகிய முகப்பு. முகப்பைக் கடந்ததும் மகா மண்டபம். அந்த மண்டபத்தின் இடதுபுறம் ஆஞ்சநேயர் சன்னிதியும், அடுத்து பிரதோஷ நாயகன், முருகன், வள்ளி, தெய்வானை, சத்யநாராயணர் சன்னிதியும், விஷ்ணு துர்க்கை சன்னிதியும் உள்ளன. வலதுபுறம் தட்சிணாமூர்த்தி, நடராஜர், சிவகாமி, கிருஷ்ணர் சன்னிதிகள் இருக்கின்றன. மகா மண்டபத்தை அடுத்து உள்ள கருவறையில் அன்னை திரவுபதி அமர்ந்த நிலையில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அன்னையின் வலதுபுறம் நாகதேவதை சன்னிதி உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் இந்த ஆலயம் அமைந்துள்ள இடத்தைச் சுற்றி நிறைய பாம்பு புற்றுகள் இருந்ததாகவும், அதனாலேயே இந்தப் பகுதி புற்றூர் என அழைக்கப்பட்டு, நாளடைவில் அதுவே மருவி புத்தூர் என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இறைவியின் இடதுபுறம் தனி சன்னிதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அன்னையின் கருவறை முகப்பில் கற்பக விநாயகரும், பால முருகனும் வீற்றிருக்கின்றனர். மகாமண்டப வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் உள்ளனர். திருச்சுற்றில் வடக்கில் காலபைரவர் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்திற்கு அரசு, வேம்பு, வன்னி மரம் என மூன்று தல விருட்சங்கள் உள்ளன.

திரு விழாக்கள் :

இந்த ஆலயம் பெரும்பாலான நாட்களில் திருவிழா கோலம் பூண்டே காணப்படுகிறது. தை மாத வெள்ளிக்கிழமைகளில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சித்திரை பவுர்ணமியில் பால்குட ஊர்வலம் நடக்கிறது. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் கூழ் வார்க்கும் திருவிழாவும், நவராத்திரி விழாவும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

திருமணத்திற்கு காத்திருக்கும் கன்னியர், அன்னையிடம் வேண்டிக்கொள்ள அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவது கண்கூடான நிஜம் என்கின்றனர் பக்தர்கள். வேண்டு தலால் திருமணம் கைகூடிய பெண்கள், அன்னைக்கு புடவை சாத்தி தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றனர்.

தம்மை நாடும் பக்தர்களின் துயர் தீர்க்க அன்னை திரவுபதி தவறுவதில்லை என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுவது நிஜமே.

மாலை தரும் யோகம் :

கந்த சஷ்டி திருவிழா இங்கு 7 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. 6-ம் நாள் சூரசம்ஹாரமும், 7-ம் நாள் முருகன் – தெய்வானை திருக்கல்யாணமும் நடக்கிறது. மண மாலைக்கு காத்திருக்கும் கன்னியர், அன்றைய தினம் இரண்டு மாலை வாங்கி வந்து முருக பெருமானுக்கு சாத்துகின்றனர். அதில் ஒரு மாலையை, கோவில் அர்ச்சகர், திரும்பவும் அந்தப் பெண்ணிடமே தரு கிறார்.

அந்த மாலையை அந்தப் பெண் தங்கள் வீட்டு பூஜை அறையிலோ அல்லது தான் வணங்கும் இறைவனின் அருகிலோ மாட்டி வைக்கின்றார். அவ்வாறு செய்யும் பெண்களுக்கு ஒரு ஆண்டிற்குள் திருமணம் நடப்பது உறுதி என்கின்றனர் பக்தர்கள். மணமானதும் அந்த மாலையைக் கொண்டு போய் காவிரி ஆற்றில் விட்டு விடுகின்றனர்.