ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற 1100 ஆப்பிரிக்க அகதிகள் முயற்சி முறியடிப்பு!!

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பலர் அகதிகளாக வந்து தஞ்சம் அடைகின்றனர். ஆப்பிரிக்காவின் மொராக்கோ நாட்டில் இருந்து ஸ்பெயினில் உள்ள சியுடா மற்றும் மெலிலா வழியாக மட்டுமே ஐரோப்பிய நாட்டுக்குள் நுழைய முடியும். எனவே ஆப்பிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள் சியுடா எல்லையில் கூடி நிற்கின்றனர்.

எல்லையில் மிகப்பெரிய தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. புத்தாண்டு தினத்தன்று அதிகாலை 4 மணியளவில் அந்த சுவர் முன்பு திரண்டு இருந்த மக்கள் சிலர் அதன் மீது ஏறி உள்ளே குதித்து நுழைய முயன்றனர்.

கோட்டையின் கதவுகளை உடைக்க முயன்றனர். அதற்காக இரும்பு கடப்பாறைகளை பயன்படுத்தினர். பல இடங்களில் கம்பி வயர்களால் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதை “வயர் கட்டர்”கள் மூலம் அகற்ற முயற்சி செய்தனர்.

பெரிய கற்களால் சுவரை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைய முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது.

மொராக்கோவின் ராணுவ வீரர்களும், ஸ்பெயினின் போலீசாரும் அவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 ஸ்பெயின் போலீசாரும், மொராக்கோ ராணுவ வீரர்கள் 50 பேரும் காயம் அடைந்தனர்.

புத்தாண்டு தினத்தன்று மட்டும் 1100 அகதிகள் ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றதாகவும், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்பெயின் எல்லையான சியுடாவுக்கு அகதிகளை காரில் கடத்தி வந்த மொராக்கோ நாட்டைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஒருவரை கார் டிக்கியிலும், மற்றொருவரை சூட்கேசிலும் மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.