நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து தற்போது திருமணத்துக்கு தயாராகிறார்கள். ஏப்ரல் மாதம் இவர்கள் திருமணம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமணம் மற்றும் புத்தாண்டு சபதங்கள் குறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு:-
“கடந்த வருடம் எனக்கு சிறப்பாக அமைந்தது. தமிழ், தெலுங்கில் நடித்த படங்கள் நன்றாக ஓடின. தெறி படத்தில் எனது கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் குவிந்தன. இதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அத்துடன் எனது காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டது, இரட்டிப்பு மகிழ்ச்சி தந்தது.
சினிமா உலகம் உயர்வானது. இதில் நடிப்பதற்கு என்று வந்து விட்டோம். பெரிய வேலை, சிறிய வேலை என்று பார்க்காமல் கடமையாக நினைத்து ஒவ்வொன்றையும் செய்து முடிக்க வேண்டும். அதிர்ஷ்டத்தை விட கடினமான உழைப்பைத்தான் நான் நம்புகிறேன். உழைப்புதான் என்னை பெரிய உயரத்துக்கு கொண்டு சென்று இருக்கிறது.
வெற்றி, தோல்விகள் பற்றி கவலைப்படுவது இல்லை. ஒவ்வொரு விஷயத்திலும் நான் என்ன நினைக்கிறேன் என்று புரியாமல் சிலர் முந்திக்கொண்டு அபிப்பிராயங்கள் சொல்கிறார்கள். இப்படி கருத்து சொல்பவர்களை எனக்கு பிடிக்காது. கடந்த வருடம் சில கஷ்டங்கள் வந்து போனது. அதன் மூலம் நிஜமான சந்தோஷம் எங்கு கிடைக்கும் என்ற தெளிவு பிறந்து இருக்கிறது.
இந்த வருடத்தில் 4, 5 படங்களில் நடித்து விட வேண்டும் என்ற குறிக்கோள் வைத்து இருக்கிறேன். நிச்சயமாக அது நிறைவேறும். உடற்பயிற்சியில், நான் பைத்தியம். எந்த நிலையிலும் அதை விடமாட்டேன். உணவு கட்டுப்பாடும் இருக்கிறது. இந்த இரண்டும்தான் எனது அழகின் ரகசியங்கள்.
ஒவ்வொரு புதிய வருடத்திலும் புத்தாண்டு சபதம் எடுத்து அதை நிறைவேற்ற உழைக்கிறேன். இந்த வருடமும் அதுபோன்று சில சபதங்கள் உள்ளன. அவை என்ன என்பதை வெளியில் சொல்ல மாட்டேன்.
இவ்வாறு சமந்தா கூறினார்.