ஜெயலலிதா மறைவினால் சினிமா துறையினருக்கு 2016 மோசமான ஆண்டாக கழிந்தது: ரோஜா

ஐதராபாத்தில் நடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் நடிகை ரோஜா கலந்துகொண்டு பேசியதாவது:-

“ஆண்களுக்கு இணையாக பெண்களும் சாதிக்கலாம் என்று நிரூபித்தவர் ஜெயலலிதா. சட்டமன்றத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கியபோது வேறு பெண்ணாக இருந்தால் அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி இருப்பார். ஆனால் ஜெயலலிதா அதை எதிர்கொண்டு கஷ்டப்பட்டு போராடி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். இது அவரது விடாமுயற்சிக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெகுமதி.

சாதாரண பெண்கள்தானே இவர்களால் என்ன செய்து விட முடியும்? என்று அலட்சியமாக பார்க்கும் ஆண்களுக்கு எதையும் செய்ய முடியும் என்று நிரூபித்து விட்டு போய் இருக்கிறார். அவர் சினிமாவில் இருந்தவர் என்பது பெருமை. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர் என்பது பெருமை. முதல்-அமைச்சர் ஆனது பெருமை.

நானும் ஜெயலலிதாவைப்போலவே சட்டமன்றத்தில் இருந்து ‘சஸ்பென்ட்’ செய்யப்பட்டேன். அப்போது எனது மகள், ‘அரசியல் வேண்டாம் அம்மா. சினிமாவில் சம்பாதித்து நிறைய பேர் குடும்பம் குழந்தைகள் என்று சந்தோஷமாக இருக்கிறார்கள். நாமும் அப்படியே இருந்து விட்டு போகலாம் இப்படியெல்லாம் எதற்கு அவமானப்படவேண்டும்? அரசியலை கைகழுவி விட்டு வந்து விடு’ என்றாள்.

நான் அவளிடம், ஜெயலலிதா கஷ்டத்தில் 10 சதவீதம் கூட எனக்கு இல்லை. அவர் தனியாக வாழ்ந்து அவமரியாதைகளை சந்தித்து போராடி உயர்ந்த இடத்துக்கு வந்தார். அதை நினைக்கும்போது எனக்கு வருவதெல்லாம் கஷ்டமாக தெரியவில்லை என்றேன். சினிமா, அரசியல் உள்ளிட்ட எல்லா துறைகளில் இருக்கும் பெண்களுக்கும் ஜெயலலிதா வாழ்க்கை பாடமாகவும் வழிகாட்டியாகவும் உந்து சக்தியாகவும் இருக்கிறது. அவரைப்போல் துணிச்சலாக வாழவேண்டும்.

ஜெயலலிதா மறைவால் 2016 சினிமா துறையினருக்கு மோசமான ஆண்டாக கழிந்து இருக்கிறது”

இவ்வாறு ரோஜா பேசினார்.