பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில், பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்துவை கவுரவிக்கும் வகையில் ஆந்திர மாநில அரசு அவருக்கு 3 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தது. இதுதவிர, புதிதாக உருவாகி வரும் அம்மாநிலத்தின் தலைநகரான அமராவதியில் 9000 சதுரடியில் வீட்டு மனையும், குரூப்-1 நிலையில் அரசுப் பணியும் வழங்குவதாக அறிவித்தது.
சிந்துவின் சாதனையைக் கவுரவிக்கும் வகையில் அவருக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகையுடன், ஐதராபாத் பகுதியில் 9000 சதுரடி கொண்ட வீட்டுமனையும் வழங்கப்படும் என தெலுங்கானா அரசு அறிவித்தது.
அதன்படி, ஐதராபாத் நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற விழாவில் சிந்துவிடம் 5 கோடி ரூபாய்க்கான காசோலை ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, தெலுங்கானா அரசின் அறிவிப்பின்படி, சிந்துவுக்கு பரிசாக அளிக்கப்பட வேண்டிய வீட்டுமனையை தேர்வு செய்து முடித்த ஐதராபாத் மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி, ஷிகாப்பேட் பகுதியில் அவருக்கு 9000 சதுரடி கொண்ட மனை ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான அரசு உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.