ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் முகம் பதித்த கேக்கை கார்டனில் சசிகலா வெட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. புத்தாண்டையொட்டி அவர் கேக் வெட்டியதாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அடுத்து சசிகலாவை கார்டனில் சந்தித்தவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளதாம். அந்த கையெழுத்தை சசிகலாவை முதல்வராக்கப் போகிறது என்ற தகவல் அமைச்சர்களை கலக்கத்தில் ஏற்படுத்தி இருக்கிறதாம்.
அ.தி.மு.க.வில் அடுத்தடுத்து நிகழும் காட்சிகள் கடும் அதிர்வலைகளையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி வருவதாக அடிமட்ட தொண்டர்கள் முனுமுனுக்கத் தொடங்கிவிட்டனர். கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு சசிகலா நடராஜன் வந்து விட்டார்.
அடுத்து அவரது ஆதரவாளர்களின் ஆசை, சசிகலா முதல்வர். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை அவரது ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர். கார்டனிலிருந்து நேற்று மதியம், அனைத்து அமைச்சர்களுக்கும் ஒரு அவசர அழைப்பு வந்தது. அதில் மாலை 4 மணிக்கு அனைவரும் கார்டனில் ஆஜராக வேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்தது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி அனைவரும் குறிப்பிட்ட நேரத்துக்குள் அங்கு ஆஜராகினர். ஜெயலலிதாவின் உருவப்படத்திறப்பு நிகழ்ச்சி என்று நினைத்தவர்களுக்கு சசிகலா தரப்பு அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்துள்ளது.
கார்டனில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை கண்ணீர் மல்க சசிகலா திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர். அடுத்து சசிகலா, கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கார்டன் வட்டாரங்கள் தெரிவித்தன. வழக்கத்தை விட இந்த முறை சசிகலாவின் நடவடிக்கைகள், செயல்பாடுகளில் வித்தியாசத்தை கட்சியினர் உணர்ந்தனர். அது அவரது பேச்சிலும் தெரிந்தது என்கிறார் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர்.
அம்மா படத்தை திறந்தபிறகு எங்களிடம் சின்னம்மா பேசத் தொடங்கினார். அதற்கு முன்பு, புத்தாண்டையொட்டி கேக் வெட்ட சசிகலாவிடம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதற்கு சம்மதம் தெரிவித்தவுடன் உடனடியாக 5 கிலோ எடையுள்ள கேக் கார்டனுக்குள் கொண்டு வரப்பட்டது. ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு முன்பு அந்த கேக் வைக்கப்பட்டது. பச்சை நிறமுடைய அந்த கேக்கில் ஜெயலலிதாவும், சசிகலாவின் முகம் பதித்த படங்கள் இருந்தன. அதை சசிகலா வெட்டினார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு கேக் துண்டு கொடுக்கப்பட்டன. அவர்களும் அதை ஆர்வமாக சாப்பிட்டனர்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு அனைவரிடமும் கையெழுத்து பெறப்பட்டது. அந்த கையெழுத்து எதற்கு என்று கூட யாரும் எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. அனைவரும் அமைதியாக கையெழுத்துப் போட்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வமும் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த கையெழுத்துதான் அடுத்து சசிகலாவை முதல்வராக்க உள்ளதாம். இதன்பிறகு மாவட்ட நிர்வாகிகளை சந்திப்பது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பின்னர் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கான பட்டியல் வெளியிடப்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் சசிகலாவும், அவரது தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் கார்டனிலிருந்து கிளம்பி சென்று விட்டனர்” என்றார்.
ஜெயலலிதா மறைந்த சமயத்தில் கார்டனில் கேக் வெட்டப்பட்ட தகவல் குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என்ற தகவலையும் கிளம்புவதற்கு முன்பு மூத்த நிர்வாகி ஒருவர் சொல்ல அதற்கு அனைவரும் சம்மதித்துள்ளனர். ஆனால், நேற்றிரவு போதையில் மூத்த அமைச்சர் ஒருவர், தன்னுடைய ஆதரவாளரிடம் கேக் வெட்டிய விவரத்தை உளறியுள்ளார். அதன்பிறகே கேக் வெட்டப்பட்ட நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கார்டனிலிருந்து வெளியே வந்த அமைச்சர் ஒருவர், ‘அம்மா உயிரோடு இருந்தக் காலக்கட்டத்தில் கையெழுத்து பெறப்படும் காரணத்தையாவது ஏதாவது வழியில் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல.
கையெழுத்து என்றவுடன் பதவியை காப்பாற்றிக் கொள்ள மூத்த அமைச்சர்களே கையெழுத்து போட்டு விடுகின்றனர். அவர்களைப் பார்த்து மற்றவர்களும் போட வேண்டியதுள்ளது’ என்று புலம்பி இருக்கிறார்.
அந்த அமைச்சர் குறித்த தகவல்கள் அடுத்த சில நிமிடங்களில் கார்டனுக்கு ரிப்போர்ட்டாக பறந்துள்ளதாம். இவ்வாறு அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர். முன்பெல்லாம் அமாவாசைக்குப் பயந்த காலமாறி இப்போது தினமும் கலக்கத்தில் இருக்கின்றனர்.