நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை மற்றும் உலக பொருளாதார நிலைமையால் வளர்ச்சிவீதத்தில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டுக்கான நாணய மாற்றம் நிதியியல்துறை கொள்கைகளை உள்ளடக்கிய ‘2017 வழிகாட்டல்’ திட்டத்தை வெளியிட்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
2016ஆம் ஆண்டில் மேல்நோக்கிய அழுத்தங்கள் காணப்பட்டபோதும் பணவீக்கம் தொடர்ந்தும் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டது. நாட்டில் ஏற்பட்ட வறட்சி காரணமாக பொருளாதாரத்தில் விவசாயத்துறையின் பங்களிப்பு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இவ்வருடத்தில் பணவீக்கத்தை நடு ஒற்றை இலக்கத்தில் தொடர்ந்தும் பேண எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஸ்திரமான பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தியை உறுதிப்படுத்தும் வகையில் கொள்கைத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதுடன், இதற்கு வலுச் சேர்க்கும் வகையில் நாணயமாற்றுக் கொள்கைச் சட்டம் உள்ளிட்ட மூன்று சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரப்படவுள்ளன. மத்திய வங்கியை மீளமைப்பதற்கான வேலைத்திட்டங்களும் இவ்வருடத்தில் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாணயக் கொள்கை தொடர்பில் இரண்டு முக்கிய கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. நெகிழ்ச்சித்தன்மை கொண்ட பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பொன்றை நோக்கிய நடவடிக்கையை வலுப்படுத்தல் மற்றும் செலாவணி வீத முகாமைத்துவத்திற்கான கட்டமைப்பொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கல்விமான்கள், தொழில்சார் நிபுணர்கள் மற்றும் தனியார் துறையிலிருந்தான பிரதிநிதிகளை உள்ளடக்கிய நாணயக் கொள்கை ஆலோசனைக் குழுவொன்று மீண்டும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. நாணயக் கொள்கை தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கும்போது செயன்முறைகளுக்குச் சிறந்த உந்துதலையளிக்கும் விதத்தில் நாணயக் கொள்கை ஆலோசைனக் குழுவின் நோக்கு மற்றும் கருத்துக்களிலிருந்து நன்மைகளைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கின்றோம். 2017ஆம் ஆண்டு சர்வதேச மற்றும் உள்ளூர் முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, திறைசேரி முறிவிநியோக சர்ச்சை தொடர்பில் மத்திய வங்கியின் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய மத்திய வங்கியின் ஆளுநர், கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் கோடிக்கணக்கான பணம் மத்திய வங்கியிலிருந்து வெளிச்சென்றமை தொடர்பிலும் முழுமையான விசாரணைகள் நடத்தப்படவிருப்பதாகவும் கூறினார்.