அதிமுகவில் நான் இணைய ஓ.பி.எஸ் தான் காரணம்: அம்பலப்படுத்திய நாஞ்சில் சம்பத்

அதிமுகவில் நான் இணைய தற்போது முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தான் காரணம் என அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நாஞ்சில் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்த நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா அளித்த காரினை அதிமுக தலைமை அலுவலகத்தில் திரும்ப ஒப்படைத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று தனியார் செய்தி ஊடகத்திற்கு நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியில், அதிமுகவில் தான் தற்போது வரை இருக்கிறேன். பதவி விலகுவதாக எந்த கடிதமும் கட்சிக்கு அனுப்பவில்லை.

கட்சியும் என்னை நீக்குவதாக இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தொடர்ந்து அதிமுகவில் தான் நீடிப்பேன். தை பிறந்தால் வழி பிறக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.

பொதுவாக அரசியல் போதும் என்ற மனநிலைக்கு வந்துள்ளேன். ஏற்கனவே 30 ஆண்டு காலம் பணியாற்றி விட்டேன். இனி பொதுவாழ்வு வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.

கல்லூரி பருவத்தில் இருந்து வைகோவால் ஈர்க்கப்பட்டதால் மதிமுகவில் இணைந்து பணியாற்றினேன். ஆனால் அந்த கட்சியில் இருந்து நான் விலகுவதற்கு எனக்கு எண்ணம் ஏதும் இருந்ததில்லை.

ஆனால் வைகோ என்னை கட்சியிலிருந்து நீக்க விரும்பினார். அதனால் அந்த முடிவை எடுத்தேன். அப்போது திமுகவில் இருந்தும் சிலர் என்னிடம் பேசினார்கள். தற்போது முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வம் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதிமுகவில் இணைய கேட்டுக்கொண்டார்.

அதிமுகவில் இருந்து தொடர்ந்து வேண்டுகோள்கள் வந்தன. இதனால் 2012ல் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் என்னை இணைத்துகொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.