சிலியின் துறைமுக நகரமான வால்பரைசோவின் அருகே உள்ள மலைப்பகுதியில் நேற்று பிற்பகல் தீப்பிடித்தது. லகுனா வெர்தே பகுதியில் பிடித்த இந்த தீ, காற்றின் வேகம் காரணமாக பிளாயா அஞ்சா மலைப்பகுதிக்கு பரவியது. இப்பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.
தீ பிடித்தது பற்றி கேள்விப்ப்டட தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை வெளியேற்றிவிட்டு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 400 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். அப்போது 19 பேர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். சுமார் 100 மர வீடுகள் தீயில் கருகி சேதமடைந்தன.
உயர் வெப்பநிலை உள்ள அப்பகுதியில் காற்றும் வீசுவதால் அருகில் உள்ள பகுதிகளுக்கும் தீ பரவ வாய்ப்பு உள்ளதால் சுமார் 500 வீடுகள் தீயில் சிக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், குறுக்கும் நெடுக்குமாக பள்ளத்தாக்குகள் நிறைந்த அப்பகுதியில் சாலைகளும் மிக குறுகலாக இருப்பதால் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி மிகவும் சவாலாக உள்ளது.
காட்டுத் தீ காரணமாக வால்பரைசோ நகரில் கரும்புகை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மாஸ்க் அணிந்தபடி சென்றனர்.