இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி நியமிக்கப்பட வாய்ப்பு?

லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த தவறியதால் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை நீக்கி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து செல்வாக்குமிக்க இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை ஏற்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்த பணிக்கு தகுதியான நபரை அடையாளம் காண சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்களை நியமித்துள்ளது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அடுத்த தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுரவ் கங்குலி, தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். கிரிக்கெட் வாரிய நிர்வாக கூட்டங்களில் பங்கேற்ற அனுபவம் அவருக்கு உண்டு.

இந்திய கிரிக்கெட் அரங்கில் புகழ்பெற்ற வீரராக விளங்கிய கங்குலியே இந்த பதவிக்கு பொருத்தமானவர் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.