பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். அவர் 1.89 மீட்டர் உயரம் தாண்டி அசத்தினார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார். இதற்காக அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே மாரியப்பனை சந்தித்து, அவரது அனுபவங்களை சேகரித்து பதிவு செய்திருக்கிறார். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் மாரியப்பன் தங்கவேலு கதாபாத்திரத்தில் நடிக்கப்போகும் நடிகருக்கான தேர்வு நடக்கிறது.
இந்தப் படத்துக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை புத்தாண்டையொட்டி இந்தி நடிகர் ஷாருக்கான் வெளியிட்டார்.
இந்நிலையில், தன்னைப் பற்றிய திரைப்படம் தயாராக உள்ளதாக வந்த தகவல்களை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாரியப்பன் தங்கவேலு, ‘எனது வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் இந்தப் படம் கிராமப்புற பின்னணியில் வளர்ந்த இளைஞர்களை ஈர்க்குமானால், அதைவிட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் வேறெதுவும் இருக்க முடியாது. எனினும், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான ஒப்பந்தத்தில் நான் இன்னும் கையொப்பமிடவில்லை.
இந்தப் படத்துக்கான நடிகர்களை தேர்வு செய்யும் பொறுப்பை படக்குழுவினரிடமே ஒப்படைக்க விரும்புகிறேன். எனது கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள்? என்பது முக்கியமல்ல.
ஆனால், படத்தின் கதையால் நிறைய மக்கள் ஈர்க்கப்பட வேண்டும். இந்தப் படத்துக்கு பிறகு, விளையாட்டு துறையை மையப்படுத்தி நிறைய திரைப்படங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பமாகும்’ என குறிப்பிட்டார்.