மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் சாதகமான சமிஞ்சைகள் ஏற்பட்டுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் அவசியமானவை. இந்தநிலையில் அவற்றை மாகாணங்களுக்கு வழங்குவது தொடர்பில் சாதகமான நிலை உள்ளதாக அவர் ஆங்கில செய்தித்தாள் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் இது தொடர்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், உடன்பாடு ஒன்றை எட்டமுடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டுக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுக்காணப்படும் வாய்ப்பு உள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் குறிப்பிட்டிருந்தமை தொடர்பில் கருத்துரைத்துள்ள சித்தார்த்தன், 2016க்கும் பெருமளவான முன்னேற்ற விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் ஒருவருடத்துக்குள் அரசாங்கத்தினால் இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும் என்று சம்பந்தன் கூறவில்லை என்றும் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வடக்குகிழக்கு இணைந்த தீர்வு ஒன்று தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஏ எச் எம் அஸ்ரப் சில இணக்கங்களை கொண்டிருந்தார்.
எனினும் போர் இல்லாத சூழ்நிலையில் இன்று முஸ்லிம்கள் அதனை எதிர்க்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் 40வீதமாக உள்ள தாம் வடக்குகிழக்கு இணைக்கப்பட்டால் 17வீதமாக குறைந்துவிடும் ஆபத்து குறித்து அவர்கள் அஞ்சுகிறார்கள்.
எனவே இந்தவிடயத்தில் தமிழ்முஸ்லிம் தரப்புக்கள் இணக்கம் ஒன்றை காணாதநிலையில் சிக்கல்கள் எதிர்நோக்கப்படும் என்றும் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.