இப்போதைய ஜனாதிபதி அடிக்கடி தெரிவிக்கும் வார்த்தைகள் “நாட்டில் இராணுவத்தினரை காப்பாற்ற வேண்டும்” என்பதே.
இதற்கு காரணம் நாட்டின் இராணுவம் தனக்கு எதிராக திரும்பி விடக் கூடாது என்பதற்காக என்றே கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் சர்வதேச மட்டத்தில் இலங்கை இராணவத்தினர் மீது போர்க் குற்றங்கள் இருப்பது அனைவரும் அறிந்த விடயம். ஆனால் அந்த போர்க் குற்றத்திற்கு எதிராக அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி எப்போது கிடைக்கும் என்பது தொடர்பில் தெரியாது.
காரணம் இலங்கை அரசினைத் தாண்டி அது சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறிதான். இப்படியான நிலையிலேயே ஜனாதிபதி தான் எந்த நிலையிலும் இராணுவத்தினரை விட்டுக்கொடுக்கமாட்டேன் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்.
இப்போது சரணடைந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் பெயர்ப்பட்டியல் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகளின் அடித்தளமே இது. இதன் மூலம் நீதி கிடைக்குமா என்ற கேள்விக்கு மட்டும் எப்படியும் விடையில்லை.
காரணம் அரசியல் கைதிகள் என்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலை இன்றும் கேள்விக்குறியே.
அதேபோன்று சரணடைந்த விடுதலைப்புலிகளை கூட்டுத்தள்ளுமாறு தமக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என முன்னாள் இராணுவத் தளபதியும் இப்போதைய அமைச்சருமான சரத்பொன்சேகா ஒத்துக்கொண்டார்.
அதற்கு என்ன பதில் அப்படியென்றால் சரணடைந்தவர்கள் கூட்டுக்கொள்ளப்பட்டார்களா? அல்லது காணாமல் ஆக்கப்பட்டனரா?
இங்கு அவருக்கு கட்டளை இட்டது அப்போதைய ஜனாதிபதி அல்லது அப்போதைய பாதுகாப்பு செயலாளர் என்பதையே அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் அது குறித்து அரசு தரப்பில் மௌனமே இருந்தது. இந்த நிலையில் காணாமல் போனோர் தொடர்பில் விபரங்களை கோரி என்ன நியாயத்தினை பெற்றுக்கொடுக்கப் போகின்றார்கள் என்பது வெளிப்படை இல்லை என்றே கூறப்படுகின்றது.
அதே போன்று காணாமல் போனோர் பட்டியலிலேயே விடுதலைப்புலிகளின் தலைவரும் கூட இருக்கின்றார். காரணம் அவருடைய மரணம் தொடர்பில் இன்றும் அரசு உறுதிப்படுத்தவில்லை.
அரசினால் மரணசான்றிதழ் கொடுக்கும் வரை அவருடைய மரணம் உண்மையில்லை. இங்கு அவரை காணாமல் போனோர் பட்டியலில் அரசு சேர்க்குமா? அப்படியென்றால் அதற்கு பதில் கொடுப்பார்களா என்ற கேள்வியும் எழுகின்றது.
இவ்வாறான பலவற்றை நோக்கும் போது சர்வதேசத்தின் மீது நன்மதிப்பை பெற்றுக்கொள்வதற்காக மட்டுமே அரசு கண்துடைப்பு நாடகங்களை அரங்கேற்றி வருவதாக கூறப்படுகின்றது.
நேர் கொண்ட பார்வையுடன் அரசு நீதியாக செயற்பட்டால் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கப்படும் அதனை விடுத்து விட்டு போலியான செயற்பாடுகளினால் எதுவுமே மாறப்போவதில்லை நீதியும் கிடைக்காது என்றே தெரிவிக்கப்படுகின்றது.