திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு வடமேற்கு முனையில் அமைந்துள்ளது அருள்மிகு பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோவில்.
குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்துவது இந்த அம்மனின் சிறப்பு அம்சமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் 64 விதமான நோய்களுக்கும் இக்கோவிலில் வேர்கட்டி, மையிடப்படுகிறது. இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குணமடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இதனை நிரூபிக்கும் விதமாக நாள்தோறும் ஏராளமானோர், நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் குழந்தைகளை இக்கோவிலுக்கு கொண்டு வந்து தீர்த்தம் தெளித்தும், மையிட்டும் செல்கிறார்கள். இந்துக்கள் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் இக்கோவிலுக்கு தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து செல்வது சிறப்பம்சமாகும்.
மேலும் மகப்பேறு விரும்பியும், பீடைகள் நீங்கவும், நோய்கள் தீரவும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரளான பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அம்மனை வேண்டி செல்கிறார்கள். ராகுகால நேரத்தில் இந்த அம்மனை வழிபடுவது சிறப்பாகும்.