தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு!

தி.மு.க. தலைவர் கருணாநிதி வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

அவர் முழுமையாக கட்சிப் பணிகளை ஆற்ற முடியாத நிலையில் இருப்பதால் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை செயல் தலைவராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்காக தி.மு.க. பொதுக்குழு சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் இன்று காலை 9 மணிக்கு கூடியது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. எனவே பொதுச்செயலாளர் அன்பழகன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

அன்பழகன் பெயரை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்மொழிய, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் வழி மொழிந்தார். இதையடுத்து பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப்பொதுச்செயலாளர் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, மகளிர் அணி செயலாளர் கனிமொழி, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் முதலில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெய லலிதா, முன்னாள் அமைச் சர்கள் கோ.சி.மணி, சற்குண பாண்டியன், துக்ளக் ஆசிரியர் சோ, நடிகை மனோ ரமா, வ.செ.குழந்தைச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பிறகு மேலும் 16 தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தி.மு.க.வுக்கு செயல் தலைவரை தேர்வு செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதற்காக தி.மு.க.வின் சட்ட விதியில் திருத்தம் மற்றும் புதிய இணைப்பு ஒன்று செய்யப்பட்டது. அந்த சட்ட திருத்தத்தை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொண்டு வந்தார். அதை பொதுக்குழு கூட்டத்தில் வாசித்தார்.அவர் கூறியதாவது:-

கழக சட்ட திட்டத்தின் விதி 18-ல் ஏற்கனவே 3 பிரிவுகள் உள்ளன. 4-வது பிரிவாக சட்ட திட்டத்தில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

அதன்படி விதி 18 பிரிவு 4-19-ல் குறிப்பிட்டுள்ளதில் மாறுபாடு இன்றி தலைவர் பதவி விலகினாலோ நீண்ட நாட்களுக்கு பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டாலோ கழக பொதுக்குழு செயல் தலைவராக ஒருவரை நியமிக்கலாம். இந்த சட்ட திருத்தத்தில் தலைவருக்கு அளிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களையும், பணிகளையும் செயல் தலைவர் ஆற்றுவார்.

இந்த சட்ட திருத்தத்துக்கு உங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில் கரவொலி எழுப்பி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடனே அரங்கில் கூடியிருந்த நிர்வாகிகளும், பொதுக்குழு உறுப்பினர்களும் நீண்ட நேரம் கரவொலி எழுப்பினார்கள். அண்ணா அறிவாலயத்துக்கு வெளியேயும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

அதன்பிறகு தி.மு.க. சட்டவிதி திருத்த அறிவிப்பை பொதுச்செயலாளர் அன்பழகனிடம் ஆர்.எஸ்.பாரதி வழங்கினார்.

அதைப் பெற்றுக் கொண்டு அன்பழகன் பேசுகையில், கழக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட கழக சட்ட திட்ட விதி 18, 4-ன் கீழ், செயல் தலைவராக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பெயரை முன்மொழிகிறேன். அவர் பொருளாளர் பொறுப்புடன் செயல் தலைவர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்றார்.

உடனே மு.க.ஸ்டாலின் எழுந்து அன்பழகன் காலைத் தொட்டு வணங்கி ஆசி பெற்றார். பிறகு அன்பழகனிடம் இருந்து செயல்தலைவர் நியமன அவிப்பை ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டதை வழிமொழிந்து துரைமுருகன், அன்பழகன் ஆகியோர் பேசினார்கள்.

இறுதியாக மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்தினார். அத்துடன் காலை 10.30 மணிக்கு பொதுக்குழு நிறைவடைந்தது.

பின்னர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் வீட்டிற்கு சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.