சிறுவர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரிப்பு!

சிறார்கள் பாலியல் வல்லுறவு உட்பட துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவது கடந்த ஆண்டு அதிகரித்து காணப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

சிறுவர்களுக்கு கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதற்கு எதிரான தேசிய தினம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அதிகார சபையின் தலைவர் கலாநிதி நடாஷா பாலேந்திரா இதனை கூறியுள்ளார்.

சிறார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை 24 மணிநேரமும் விழிப்புடன் இருந்து வருகிறது.

சிறார்கள் சம்பந்தமான முறைப்பாடுகள் இருந்தால், 1929 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சிறுவர்கள் துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாத்து அவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவது தொடர்பில் 2014ம் ஆண்டு 10 ஆயிரத்து 315 முறைப்பாடுகள் கிடைத்தன.

2015ம் ஆண்டில் இது சம்பந்தமாக 10 ஆயிரத்து 731 முறைப்பாடுகள் கிடைத்தன.

சிறுவர்கள் கொடுமைப்படுத்தப்படுவது தொடர்பாகவே அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்தன.

இது குறித்து 2 ஆயிரத்து 317 முறைப்பாடுகள் கிடைத்தன.பிள்ளைகளுக்கு கட்டாயம் கல்வி வழங்கப்படாமைக்கு எதிராக ஆயிரத்து 463 முறைப்பாடுகள் கிடைத்தன.

சிறார்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக 433 முறைப்பாடுகள் கிடைத்தன.

மேல் மாகாணத்திலேயே சிறார்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. இதனைத் தவிர காலி, குருணாகல் மாவட்டங்களில் இருந்தும் அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் நடாஷா பாலேந்திரா குறிப்பிட்டுள்ளார்.