ஸ்டாலினை குறிவைத்து பேசிய சசிகலா!

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஸ்டாலின் பேச்சு உண்மைக்கு புறம்பானது என அதிமுக பொதுசெயலாளர் சசிகலா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழர்களின் பாரம்பரிய நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டு என்னும் கிராமிய விழா தடையின்றி நடத்தப்பட வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட கடும் முயற்சிகளை மறைத்துவிட்டு; அவர் உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்கக் கூறிய நுணுக்கமான வாதங்களை புறம்தள்ளிவிட்டு, ஜெயலலிதாவின் அரும் செயல்களை கொச்சைப்படுத்தும் வகையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வகையில் உள்ளது. ஜெயலலிதாவின் ஜல்லிக்கட்டுக்கான சட்டப் போராட்டத்தைப் பற்றிய முழு உண்மைகளையும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி, அதை உண்மையாக்கும் முயற்சி கடந்த தலைமுறைகளின் தந்திரமாக இருந்திருக்கலாம். அனைத்துத் தகவல்களும் ஒரு நொடியில் எல்லோரது விரல் நுணிக்கும் வந்துவிடும் இந்த அறிவியல் யுகத்தில் பொய்ப் பிரச்சாரங்கள் நெடு நேரம் உலவ முடியாது.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக 2006-ஆம் ஆண்டு முதலே பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, இறுதியாக 7.5.2014 அன்று உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.

ஜெயலலிதாவின் ஆணையின் படி, உச்ச நீதிமன்றத்தின் தடை ஆணையை மறு பரிசீலனை செய்யக் கேட்டு 19.5.2014 அன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, பொது விவகாரம் தொடர்பாக சசிகலா வெளியிட்ட முதல் அறிக்கை இதுவாகும்.