குழப்பத்தை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்க சூழ்ச்சி! புலனாய்வுத் தகவல்!!

ஹம்பாந்தோட்டையில் அசாதாரண சூழ்நிலை ஒன்றை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு குழப்பமான சூழ்நிலை ஒன்றை ஏற்படுத்தி, அதன் ஊடாக மக்கள் உயிர்களை பலிகடாவாக்குவதற்கு மேற்கொள்ளும் திட்டம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புலனாய்வு பிரிவினால் இந்த தகவல் வெளியிடப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த திட்டத்தை செயற்படுத்துவதற்காக சில அரசியல் குழுக்கள் மக்களை தவறான வழியில் அனுப்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நான் ஹம்பாந்தோட்டையில் பிறந்த ஒருவன். சிலர் கூறுவதனை போன்று பல ஏக்கர் காணி வழங்குவதற்கு ஹம்பாந்தோட்டை அவ்வளவு பெரிய இடம் இல்லை. ஹம்பாந்தோட்டையில் எந்த கிராமமும் நீக்கப்படாது.

நிர்மாணிக்கப்படுகின்ற தொழிற்சாலைகளுக்குள் சீன முதலீட்டாளர்களினால் சீமெந்து தயாரிப்பு தொழிற்சாலை, மின்சார உற்பத்தி ஆலைகள் உட்பட சில தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் பத்தாயிரம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். இது புதிய திட்டமல்ல. கடந்த அரசாங்க காலத்தில் திட்டமிடப்பட்ட திட்டமாகும். ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தல விமான நிலையத்தில் மாத்திரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி விட முடியாது.

நாட்டிற்கு பாதிப்பேற்படுத்தும் முறையிலான ஒப்பந்தங்களுக்கு செல்ல மாட்டோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னிடம் வாக்குறுதி வழங்கியிருந்தார். அப்படி ஒன்று நடந்தால் இந்த அரசாங்கத்தை விட்டு முதலில் விலகுவது நான் தான். எங்களுக்கு அரசாங்கத்திலும், எதிர்கட்சியிலும் இருந்து பழக்கம் உண்டு என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.