மரண தண்டனை கைதி பட்டப்படிப்பை பூர்த்தி செய்து சாதனை!

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவர் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்து இலங்கை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் இதுவரையில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பம்பலப்பிட்டியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் முஹமட் சியாம் படுகொலை வழக்கின் குற்றவாளியான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டம் பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் துணைப் பொலிஸ் பரிசோதகரான பீ.ஏ. லக்மின இந்திக்க பமுனுசிங்க என்பவரே இவ்வாறு பட்டம் பெற்றுக்கொண்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட போது அவர் பல்கலைகழககத்தின் முதலாம் ஆண்டு கல்வியை பூர்த்தி செய்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

பட்டக் கற்கைநெறியின் எஞ்சிய ஆண்டுகளுக்கான விரிவுரைகளில் பங்கேற்க அனுமதியளிக்குமாறு லக்மின இந்திக்க சிறைச்சாலை அதிகாரிகளிடம் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான ஒழுங்குகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.

மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னரும் சுய முயற்சியில் இவ்வாறு பட்டக் கற்கைநெறி ஒன்றை பூர்த்தி செய்தiமை ஏனைய கைதிகளுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது என வெலிக்கடைச் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரபல வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் எவரும் இவ்வாறு இதற்கு முன்னர் பல்கலைக்கழக பட்டமொன்றை பெற்றுக்கொண்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் லக்மின என்ற பட்டம் பெற்றுக் கொண்ட மரண தண்டனைக் கைதி பங்கேற்பார் என சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.