மஹிந்த தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை பாதுகாத்துக் கொள்ள போராட நேரிடும் : ரணில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை பாதுகாத்துக்கொள்ள போராட நேரிடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நிலையான அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வு ஒன்று நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், பிரதமர் பதவிக்காக போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக்கொள்ள போராட நேரிடும்.

மஹிந்த ராஜபக்ச குருணாகல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியிட்டியிருந்தார். எனினும், குருணாகல் மாவட்டத்திற்கு மஹிந்த தனது ஆட்சிக் காலத்தில் அளித்த ஒரே விடயம் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி மட்டுமேயாகும்.

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களினால் கூட்டு எதிர்க்கட்சியினால் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு உள்ளூராட்சி மன்றத்தையேனும் கைப்பற்ற முடியாது. அப்போது கூட்டு எதிர்க்கட்சிக்கான ஒட்சிசன் அற்றுப் போகும்.

மேலும், தற்போதைய அரசாங்கம் விஹாரைகளை உடைக்கவோ மக்களின் காணிகளை பலவந்தமாக சுவீகரிக்கும் நடவடிக்கைகளையோ மேற்கொள்ளாது.

எதிர்வரும் தேர்தல்களின் போது மேடையில் ஏறி பேசுவதற்கு மஹிந்தவிற்கு எதுவும் இருக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.