அதிரடி காட்டும் மஹிந்த அணி..! பின்வாங்குகிறாரா மைத்திரி..!

புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதில் இலங்கைக்கு பாரிய சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக இந்திய ஊடகமான இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் கருத்தறியும் குழுவினர் நாடளாவிய ரீதியில் இருந்து பெற்றுக்கொண்ட கருத்துகளை கைவிட்டுவிட்டு, புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதற்கு புதிதாக மக்களிடம் கருத்தைக் பெற்றுக்கொள்ளப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டுக்குள் புதிய அரசமைப்பு சாத்தியமாகும் என்ற இலங்கை அரசின் வாக்குறுதிகள் நிறைவேறாத அதேவேளை இந்த வாக்குறுதிகள் எதிர்காலத்தில் பூர்த்தியாவதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பௌத்தமத உயர் தலைவர்களைச் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அரசியலமைப்பில் பிரிவினைவாதத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிய அரசியலமைப்பு பௌத்த மத தலைவர்களுடன் ஆலோசித்த பின்னரே உருவாக்கப்படும் எனவும், இது தொடர்பாக மக்களிடம் மீண்டும் கருத்தறியவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக நாடு முழுவதும் கடும் சிரமத்தின் மத்தியில் பொதுமக்கள் கருத்தறியும் குழு தயாரித்த அறிக்கை புதிய அறிக்கைக்காக கைவிடப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆளுநர்களுக்கு அதிகாரம் குறைக்கப்படவேண்டுமெனவும், மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டுமெனவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இந்தப் பரிந்துரைகள் பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. அவர்கள் இதனைப் பிரிவினையாகக் கருதுகின்றனர் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவு அணியான கூட்டு எதிர்க்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன ஆகிய கட்சிகள் புதிய அரசியலமைப்பு உருவாக்கும் முயற்சியை எதிர்த்து வருகின்றன.

அதற்கு எதிராக வெற்றிகரமானதும், அதிரடியாகவும் பிரசாரத்தையும் முன்னெடுத்துள்ளன. இந்தப் பின்னணியிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தையும் நோக்கவேண்டியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் நீடித்துள்ள இனப்பிரச்சினைக்கு புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தீர்வு பெற்றுக்கொள்ள முடியும் என தமிழர்கள் தரப்பு எதிர்ப்பார்த்துள்ள நிலையில், இது தமிழ் மக்களுக்கு பாரிய ஏமாற்றமாக அமையும் என அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.