யாரப்பா நீ? – இலங்கையின் நியதியை மைத்திரியால் மாற்ற முடியுமா??

ஒரு மின்கம்பத்தில் கட்டியிருந்த ஒரு சிறு துண்டு காகிதம் கண்ணில் பட்டது. அதில் ” என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டு கொள்கிறேன். எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை” என்று விலாசத்துடன் எழுதியிருந்தது.

எனக்கும் பொழுது போகாத காரணத்தால் நான் அந்த விலாசத்தை தேடிச் சென்றேன், ஒரு நாள் மழைக்கு கூட தாங்காத குடிசை ஒன்று கிடைத்தது விலாசத்தின் படி . வெளியில் , கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா.

யாரப்பா நீ? என்றாள் அந்த ஏழைத்தாய். “நான் இந்த வழியாக வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அது உங்களிடம் தரலாம் என்று வந்தேன்.

நான் இதைச் சொல்ல அத்தாய் கண்ணீர் மல்க. “தம்பி இரண்டு நாட்களாக சுமார் முப்பது பேருக்கும் அதிகமானவர்கள் வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது என்று சொல்லி கொடுத்து விட்டு போகின்றார்கள்.

அந்த கடிதத்தை நான் எழுதவில்லை, எனக்கு எழுத படிக்க தெரியாது. இந்த வார்த்தைகளில் ஏழ்மைக்கே உரிய உண்மை தெரிந்தது, கண்ணில் சோகம்.

“பரவாயில்லை அம்மா நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிக் கொடுத்து விட்டு திரும்பினேன். ஓர் உதவி என அத்தாய் “தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடித்தை மறக்காமல் கிழித்துப் போட்டு விடு” என்றாள் கண்ணீருடன்.

என் மனதில் வித விதமான எண்ணங்கள். கேள்விகள் யார் அந்த கடிதத்தை எழுதியது? அந்த தாய் அதனை கிழித்து விடும் படி ஒவ்வொருவரிடமும் கூறியிருப்பார் அப்படி என்றால் ஏன் எவரும் கிழிக்கவில்லை?

ஓர் ஏழைத்தாய்க்கு கடித வடிவில் நன்மை செய்த அந்த நண்பருக்கு நன்றிகள். மனம் இருந்தால் நன்மை செய்ய ஆயிரம் வழிகள் உண்டு என்பதையும் நினைத்துகொண்டு திரும்பும் போது.,

“அண்ணா இந்த விலாசம் எங்கே என்று சொல்ல முடியுமா? கீழே இருந்து 50 ரூபாய் கிடைத்தது. அந்த அம்மாவடம் கொடுக்க வேண்டும். என்றது ஒரு குரல்… கண்கள் பனித்தன. மனித நேயம் சாகவில்லை. மனிதம் இன்றும் வாழ்கின்றது.

இந்த கதை எதிர்காலத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு இப்போதைய வாழ்வில் இது சாத்தியமா?

நாம் கடந்து செல்லும் பாதையிலும் எத்தனை ஏழ்மைகள் கொடுமையை அனுபவிக்கின்றன. கண்டும் காணாமல் செல்வது தான் முறையா?

இலங்கையில் நிலைப்படி பணம் படைத்தவன் மேலும் பணக்காரனாகிக்கொண்டே செல்வான் அதுவே நியதி. நாடு இவ்வாறு இருக்க., அந்த நிலையை மாற்றுவாரா ஜனாதிபதி?

நாட்டை வறுமையில் இருந்து விடுதலையாக்கும் ஆண்டாக 2017ஆம் ஆண்டை அரசாங்கம் அறிவித்து அதற்கான வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட நடவடிக்கை குழு ஒன்றினையும் நியமித்துள்ளார்.

இது சாத்தியமா? இலங்கை மட்டுமல்ல பல உலக நாடுகளுக்கும் இப்போது உள்ள முக்கிய சவால் வறுமையினை ஒழிப்பதே.

எப்படியும் இது நடக்குமா என்பது கேள்விக்குறிதான், காரணம் வறுமையை ஒழிக்க அரசு முயற்சித்தால் மட்டும் போதாது தனி மனிதனும் நினைக்க வேண்டும்.

அதற்கு மனிதாபிமானம் நிலைக்க வேண்டும் அது இப்போது இருக்கின்றதா இருந்தால் உலகில் ஏன் வறுமை பசி? பிணி? தீர்க்கப்படுமா இது?

அரசினால் மட்டும் முடியுமா என்பது கேள்விக்குறியே இருந்தாலும் நிறைவேறினால் சிறப்பு. பார்ப்போம் ஜனாதிபதி இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவாரா என்று.