நீதிபதி பற்றி விமர்சனம்.. வைகோ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 5ம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். உடல்நலம் தேறிவந்த நிலையில் அவரது திடீர் மரணம் அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் நீடிப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி அதிமுக பிரமுகர் ஜோசப் தொடர்ந்த வழக்கு கடந்த 29ஆம் தேதி நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

நீதிபதிக்கு வந்த சந்தேகம்
வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதா மரணத்தில் தனக்கு தனிப்பட்ட முறையில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்தார். ஜெயலலிதா 75 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறித்து வெளியான செய்திகளில், அவர் நலமடைந்தார். உணவு சாப்பிட்டார். கோப்புகளில் கையெழுத்திட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், திடீரென அவர் எப்படி உயிரிழந்தார்? என்றும் நீதிபதி வைத்தியநாதன் கேள்வி எழுப்பினார்.

பிரேத பரிசோதனை செய்யப்படும்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகாவது, அவரது மரணத்தில் இருக்கும் சந்தேகம் தீர்க்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். மேலும், நானே தொடர்ந்து விசாரணை நடத்தினால், ஜெயலலிதா உடலை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை நடத்தவும் உத்தரவிட்டிருப்பேன் என்றும் நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தார்.

நீதிபதி கருத்தால் பரபரப்பு
நீதிபதி வைத்தியநாதனின் அந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஜெயலலிதா மரணம் குறித்து தெளிவு படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

நீதிபதி கருத்துக்கு வைகோ கண்டனம்
இந்நிலையில் நீதிபதி வைத்தியநாதனின் இந்த கருத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடலைத் தோண்டியெடுத்து பரிசோதிக்க உத்தரவிடுவேன் என நீதிபதி கூறியிருப்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? என்று கேட்டார்.

எல்லையை தாண்டி பேசியிருக்கிறார்..
மேலும் நீதிபதி வைத்தியநாதன் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்றும், அவர் தனது எல்லையைத் தாண்டி பேசியிருக்கிறார் என்றும் வைகோ குற்றம்சாட்டினார். இவருடைய கருத்து பல நீதிபதிகளின் மனதைக் காயப்படுத்தியிருப்பதாகவும் வைகோ கூறினார்.

வைகோ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
இந்நிலையில் வைகோவின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் சூரியபிரகாஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.