மக்களிடம் ஆதரவை பெற சசிகலா மாஸ்டர் பிளான்.. மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன தெரியுமா?

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார் அக்கட்சியின் புதிய பொதுச் செயலாளரான சசிகலா.

கடந்த சனிக்கிழமை அவரை பொதுச்செயலாளராக அதிமுக பொதுக்குழு தேர்ந்தெடுத்தது. இந்த நிலையில்தான், அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடனும் இன்று முதல் 9ம் தேதி வரை தினமும் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார் சசிகலா.

ஜெயலலிதா காலத்தில் அதிமுக எப்படி வலிமையானதாக இருந்ததோ அதே போன்று கட்சியை வழி நடத்த வேண்டும் என்பதே மீட்டிங்கின் அஜெண்டாவாக இருந்துள்ளது.

செல்வாக்கு
கட்சியின் கீழ்மட்ட அளவில் தனக்கான செல்வாக்கை உயர்த்த நகரம், ஒன்றியம், கிளைக் கழக அளவில் உள்ள நிர்வாகிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டத்தோடு உள்ளாராம் சசிகலா. அப்படித்தான் இன்று காலை மாவட்டச் செயலாளர்களை சந்தித்தார்.

புதிய உறுப்பினர்கள்
ஜெயலலிதா இருந்திருந்தால் எவ்வளவு கட்டுக்கோப்பாக கட்சியை நடத்துவார் என்பது உங்களுக்குத் தெரியும். அதே பாணியில்தான் நாம் செயல்பட வேண்டும். மாதா மாதம் ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும். வார்டுக்கு 50 புதிய உறுப்பினர்களை கட்சிக்குள் இழுத்து கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆருக்கு மிகுந்த முக்கியத்துவம்
எம்.ஜி.ஆருக்காக கட்சிக்கு ஆதரவாக இருப்பவர்களை ஈர்ப்பதற்காக ஜனவரி 17ல் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை வழக்கத்தைவிடவும் அதிக சிறப்பாகக் கொண்டாட வேண்டும். எம்ஜிஆரின் அவரது நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும். விளையாட்டு போட்டி களையும், பேச்சு போட்டி களையும் நடத்த வேண்டும். அதில் வெற்றி பெருவோருக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு பரிசுகளை வழங்குவேன். அண்ணா பிறந்தநாள், ஜெயலலிதா பிறந்தநாள் தினங்களிலும் நமது கொண்டாட்டங்கள் புதிய உச்சம் தொட வேண்டும் என கூறியுள்ளாராம் சசிகலா.

மாவட்ட சுற்றுப் பயணம்

கட்சித் தொண்டர்களை சந்திப்பதற்காக மாவட்டம்தோறும் சுற்றுப் பயணம் மேற்கொள்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மாவட்டச் செயலாளர்களுக்கு இன்று அறிவுறுத்தப்பட்ட தகவல்கள் கிளைக் கழகம் வரையில் கொண்டு செல்லுமாறு சொல்லப்பட்டிருக்கிறது. சிறப்பான ஆட்சியைக் கொடுத்தால், மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும் என்பதால் ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள குறைகளை என்னிடம் கொண்டு வாருங்கள். அதை நிவர்த்தி செய்து மக்களிடம் நல்ல பெயரை பெறுவோம் என கூறியுள்ளாராம் சசிகலா.

சூழ்ச்சியை வீழ்த்துவோம்
ஜெயலலிதா இல்லாத இந்த கால கட்டத்தில், அவரது மரணத்தை விமர்சனங்கள் செய்து அரசியலில் ஆதாயம் தேட சிலர் நினைக்கிறார்கள். அவர்களது சூழ்ச்சியை நாம் ஒன்று பட்டு முறியடிக்க வேண்டும். ஜெயலலிதா ஏற்றிய தீபத்தை அணையாமல் காக்க வேண்டும். இளம் பெண்கள் பாசறையில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். கட்சியை கட்டுகோப்புடன் கொண்டு செல்ல அனைவரும் சிறப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு சசிகலா பேசியுள்ளார்.