திண்டுக்கல் மாவட்டத்திலும் சசிகலாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குக்கிராமங்களிலும் ஜெ.தீபா பேரவை விஸ்வரூபமெடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
திண்டுக்கல் மாவட்டத்தில் சசிகலா பொதுச்செயலராக ஆதரவு தெரிவித்து ஒரு சில போஸ்டர்களே முதலில் ஒட்டப்பட்டன. அவர் பொதுச்செயலராகிவிட்ட நிலையில் அதிமுகவின் பல்வேறு பிரிவுகளின் சார்பில் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் இதில் சசிகலாவின் முகம் தொடர்ந்து கிழிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் விஸ்வரூபமெடுத்து வருகின்றன. பட்டிதொட்டியிலும் ஜெ. தீபா பேரவை உதயமாகி வருகிறது.
இதை சகிக்க முடியாத சசிகலா ஆதரவாளர்கள் போலீசார் துணையுடன் தீபா போஸ்டர்களை அகற்றுவதில் மும்முரமாக இருந்து வருகின்றனர். சில இடங்களில் போலீசாரின் எதிர்ப்பை மீறி அதிமுக நிர்வாகிகள் ஜெ. தீபா பேரவை போஸ்டரை வைத்து அமர்க்களப்படுத்தி வருகின்றனர். இது சசிகலா ஆதரவாளர்களை கதிகலங்க வைத்துள்ளது.