சென்னை மயிலாப்பூரில் கோபதி நாராயணன் செட்டித் தெருவில் உள்ளது கோலவிழி அம்மன் ஆலயம். இந்தக் கோவிலுக்குச் செல்லும் முகப்பில் ‘சடலாடும் வரசக்தி விநாயகர்’ கோவில் அமைந்துள்ளது. இது மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும்.
இந்த ஆலயத்தில் மாதம் தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி வெகு சிறப்பாக நடைபெறும். அன்றைய தினம் விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு செய்யப்படும். இதே போல் ஆவணி மாதத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரின் அருளைப் பெற்றுச் செல்கிறார்கள்.
அன்றைய தினம் விநாயகர், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இத்தல விநாயகர், பக்தர்களின் வேண்டுதலை வரமாக அளிக்கும் வல்லமை கொண்டவர். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.