இறைவனின் கட்டளைக்காகக் காத்திருந்த எம்பெருமானார்!

அகபாவின் இரண்டாவது உடன்படிக்கைக்குப் பிறகு மக்காவில் முஸ்லிம்களில் நிலை மேலும் மோசமடைந்தது. ஒருவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார் என்று தெரிந்தாலே அவரைக் குறைஷிகள் துன்புறுத்தத் தொடங்கினர். இஸ்லாமை ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் நாடு துறந்து செல்கிறார்கள் என்று தெரிந்து கொண்டால் அவர்களைத் தடுத்து, குறைஷிகள் அவர்களுக்குப் பல கொடுமைகளை நிகழ்த்தினர்.

தங்களுடைய மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் தம் சொந்த மண்ணை விட்டு வெளியேறினர். போகுமிடத்தில் எதிர்கொள்ள வேண்டியவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் இறைவனின் மீது நம்பிக்கை வைத்து, தாங்கள் சம்பாதித்த எல்லா உடைமைகளையும் விட்டுவிட்டு, சொந்த நாட்டைத் துறந்து சென்றனர்.

உமர் இப்னு கத்தாப் மற்றும் அய்யாஷ் இப்னு அபூ ரபீஆ இருவரும் மக்காவிலிருந்து வெளியேறி குபாவென்ற இடத்தில் தங்கியிருந்தனர். அதை அறிந்து கொண்ட இணை வைப்பாளரான அபூ ஜஹ்ல் அங்கு வந்து, தனது தாய் வழி சகோதரரான அய்யாஷிடம் “உன் தாய் உன்னைக் காணாமல் தவிக்கிறார். நீ வந்தால்தான் தன் தலை முடியைக் கட்டுவேன் என்று சபதமெடுத்துச் சத்தியம் செய்து, உன் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறாள்” என்று கூறினார். அபூ ஜஹ்ல் சொன்னதை அப்படியே நம்பிய அய்யாஷ் தன்னைக் காணாமல் தவிக்கும் தாயிடம் திரும்பிச் செல்லத் தயாரானார். இதில் ஏதோ சதி திட்டமுள்ளது என்று உமர் (ரலி) அய்யாஷை எச்சரித்து தடுத்துப் பார்த்தார். ஆனால் அய்யாஷ், தன் தாய் மீதான பிரியத்தில் எதையும் சந்திக்கத் தயாரென்பது போல் அபூ ஜஹ்லுடன் சென்றுவிட்டார்.

போகும் வழியிலேயே அய்யாஷின் மீது அபூ ஜஹல் பாய்ந்து, அவரைக் கட்டி வைத்து சித்தரவதைப்படுத்தினார். இணை வைக்கும் குறைஷிகள் அய்யாஷை மக்காவின் வீதிக்கு மீண்டும் கொண்டு வந்து “மக்களே, இஸ்லாமை ஏற்று ‘ஹிஜ்ரா’ அதாவது நாடு துறப்பவரின் நிலை இதுதான்” என்று மற்ற மக்காவாசிகளிடம் எச்சரிக்கை விடுத்தனர்.

அய்யாஷைப் போலவே ஹிஷாமும் குறைஷிகளின் பிடியில் சிக்கிக் கொண்டார். யாராவது ஹிஜ்ரா செய்கிறார் என்று தெரிந்தாலே அவர்களைப் பிடித்துத் துன்புறுத்தி வந்தனர் குறைஷிகள். இவ்வளவு தொந்தரவுகள் இருந்தும் முஸ்லிம்கள் ஒவ்வொருவராக நழுவி மதீனாவைச் சென்றடைந்தனர். இப்படியாக அகபாவின் இரண்டாவது உடன்படிக்கைக்குப் பிறகு பல முஸ்லிம்கள் மக்காவைவிட்டு வெளியேறி மதீனாவிற்குச் சென்றனர். ஹபஷாவிற்குச் சென்றிருந்த முஸ்லிம்களும் மதீனாவிற்குத் திரும்பினர்.

உலகமெல்லாம் நபியவர்களைப் பொய்யர் எனக் கூறிய போது உண்மையாளர் என்று ஏற்றவர் அபூ பக்கர் (ரலி) அவர்கள். முஸ்லிம் சமுதாயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அபூ பக்கர் (ரலி) நேசித்த அளவுக்கு வேறு எவரும் நேசிக்க முடியாத அளவுக்கு நபியவர்களுக்கு நெருக்கமானவர். அதனால் அபூ பக்கர் ஹிஜ்ரா செய்யாமல் நபிகளாருடன் மக்காவில் இருந்தார்கள்.

இந்த நேசத்துடன் நெருக்கமான சொந்தமும் ஏற்பட வேண்டும் என்ற காரணத்தால் அபூ பக்கர்(ரலி), தம் மகள் ஆயிஷா (ரலி) அவர்களை மனமகிழ்வுடன் நபிகளாருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். நபி முஹம்மது (ஸல்) அவர்களுடன் அபூ பக்கர் (ரலி), அலீ (ரலி) மற்றும் சிலரே மக்காவில் இருந்தனர். அவர்களும் மக்காவைவிட்டு வெளியேற எல்லாத் தயாரிப்புகளுடனும் நபிகளாரின் கட்டளைக்காகக் காத்திருந்தனர்.

நபி (ஸல்) அவர்களும் ஹிஜ்ராவிற்குண்டான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்திருந்தார்கள்.