நல்லாட்சி அரசாங்கம் ஊழல்வாதிகளை கைது செய்து தண்டித்து அவர்களிடம் உள்ள பணத்தை மீளப்பெற்று நாட்டின் நன்மைக்கு பயன்படுத்தும் என்று கூறி ஆட்சிக்கு வந்தது.
ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. தற்சமயம் நடைபெறும் ஊழல்களையும் கண்டுபிடிக்கவில்லை. பாராமுகம் காட்டி அசட்டையாக பல செயல்பாடுகள் இடம்பெறுகின்றன.
சம கால அரசாங்கத்திலும் பல ஊழல்கள் இடம் பெறுவதை தடுக்க முடியாது உள்ளது. மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. மத்திய வங்கி பிணை முறி மோசடியிலேயே பெருந்தொகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பங்குச்சந்தையில் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதாக கூறப்படுகின்றது. முன்னர் ஐக்கிய தேசிய கட்சி பதவிக்கு வந்தால் மக்களின் கைகளில் பணம் புலங்கும் என்று கூறுவார்கள். மேலும் பங்குச்சந்தையில் பாரிய முன்னேற்றம் ஏற்படும் என்றும் பாரிய வியாபாரிகளின் கட்சி என்றும் பெயர் பெற்றிருந்தது.
ஆனால் இந்த அரசாங்கத்தை பார்க்கும்போது, அவ்வாறு ஒரு சதம்கூட பார்ப்பதற்கில்லை. மிகவும் பின்தங்கிய ஒரு நிலைமையையே பார்க்க முடிகிறது.
எங்கு பார்தாலும் ஆர்பாட்டங்கள். வேலை நிறுத்தங்கள். ஏன் லொத்தர் டிக்கட் முகவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் வகையில் நிலைமை மோசமடைந்துள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சரித்திரத்தில் இதற்கு முன்னர் ஒருபோதும் லொத்தர் டிக்கட் விற்பனையாளர்கள் வேலை நிறுதத்தில் ஈடுபட்டதில்லை.
அரசாங்கத்திற்கு இலகுவாக வருமானம் பெற்றுத்தரும் வழிகளில் லொத்தர் டிக்கட் விற்பனையும் ஒன்று. அந்த வருமானத்திலும் இப்போது வீழ்ச்சி.
இலங்கை சிறந்த சர்வதேச விமான நிலையம் கடுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஜனவரி 6ஆம் திகதி முதல் ஏப்ரல் 6ஆம் திகதி வரை காலை 8 மணி முதல் மாலை 4 மணி மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கைக்கான பல வாய்ப்புக்கள் இழக்கப்படவுள்ளன. ஓடுபாதை திருத்த பணிகளுக்காக இது மூடப்படுகிறது என்று கூறினாலும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை நாம் நன்கு சிந்தித்து பார்க்க வேண்டும்.
நாட்டின் பொருளாதார நிலைமை உறுதியாக இருக்கும்போது சில இத்தகைய திருத்த பணிகளை மேற்கொள்ளலாம். சில முதலீட்டு வாய்ப்புக்களை தவிர்க்கலாம்.
ஆனால், பொருளாதாரம் கடன் பளு மற்றும் ஏனைய காரணங்களினால் ஊசலாடிக்கொண்டிருக்கும்போது, இத்தகைய செயல்பாடுகளை ஏதேச்சையாக செய்வது நாட்டின் பொருளாதாரத்தை மேலும் புண்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
பணவீக்கம் அதிகரித்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் கணிசமான அளவு குறைவடைந்துள்ளன.சீனாவுடன் பகைப்பது போன்று காண்பித்தாலும் இறுதியில் சீனாவிடமே கை ஏந்தும் நிலை உருவாகியுள்ளது. இது மறுபுறத்தில் இலங்கை – இந்திய உறவில் விரிசலை ஏற்படுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.