தேய்பிறை அஷ்டமியில் பைரவரை விரதமிருந்து வழிபடுங்கள்!!

அஷ்டமி என்பது, எட்டாவது திதி நாள். அதிலும் தேய்பிறையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. அஷ்டமி விரதம் தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் தேய்பிறையில் வரும் அஷ்டமியில் ஆரம்பிக்க வேண்டும்.

கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் நிகழ்ந்ததாக சத்ருத்ர சம்ஹிதாவின் 8-வது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. துன்பங்களும், துயரங்களும் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையில் நமக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காகவே பைரவர் வழிபாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நமது வழிபாடு களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகிறார்.

ஸ்ரீ கால பைரவர் என்றால் பரபிரம்மம் என்று பொருளாகும். பாவங்களிலிருந்து விடுபடுவதே பைரவம் என்ற பிரம்ம நிலையாகும். நாம் அதனிடம் இருந்தே பிறக்கிறோம். கடைசியில் அதனிடமே சென்று மறைகிறோம். பைரவர் என்றால் பயமில்லாதவர், மற்றும் பக்தர்களின் பாவத்தை நீக்குபவர் என்றும் பொருள். ஜனன ஜாதகத்தில் அமைந்துள்ள அனைத்து கிரக தோஷங்களையும் நிவர்த்தி செய்ய வல்லது பைரவர் வழிபாடாகும்.

ஏனெனில் பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடங்கியுள்ளது. அந்தக் காலச்சக்கரத்தினை இயக்கி நவகிரகங்களை ஆட்சி செய்பவர் பைரவரே. பைரவர் மும்மூர்த்தி ஸ்வரூபமானவர் என்று வேதங்கள் கூறுகின்றன. இறைவனின் அருவ வழிபாட்டு முறை- சிவலிங்கம், இறைவனின் திருஉருவம் வழிபாட்டு முறை- ஸ்ரீ கால பைரவ ஸ்வரூபம், இதுவே பரப்பிரம்மம் தத்துவம், ஸ்ரீ சுவர்ணாகர்ஷண பைரவர், சிவபெருமானின் பிரதி பிம்பம், சிவனுடைய தியான ஸ்வரூபம் சிவலிங்கம், இறைவன் கண்விழி திறந்தால் கால பைரவர் ஸ்வரூபம், இதுவே ஓங்காரம் தத்துவம்.

பைரவரை காலையில் வழிபட அனைத்து நோய்களும் நீங்கும், பகலில் வழிபட விரும்பியது எல்லாம் கிடைக்கும்.மாலையில் வழிப்பட செய்த பாவங்கள் விலகும், இரவில் வழிபட முக்தி நிலை கிட்டும். அகந்தை கொண்டு தவறு செய்பவர்கள் தேவர்களாகவே இருப்பினும் இறை தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் தீய எண்ணத்துடன் பிறர் செய்யும் இடையூறுகளில் இருந்தும் நல்லவர்கள் போற்றிக் காப்பாற்றப்படுவார்கள் என்பதே பைரவர் திருக்கோலம் உணர்த்தும் தத்துவம் ஆகும்.

ஆதி காலத்தில் நம் முன்னோர்கள் செய்த வழிபாட்டில் திருக்கோவில்களிலும் அனைத்து வீடுகளிலும் பைரவர் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் இப்பொழுது குறைந்து விட்டது. ஸ்ரீபைரவரை போல பாசமும் –  நேசமும் உடையவர் வேறுயாருமில்லை, பைரவரை உபாசனை செய்தால் அடுத்த பிறவி இல்லை. ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவரை வழிபட்டால் வாழ்க்கையில் மேன்மை பெறலாம்.