மரிப்பதற்காகவே பிறந்தவர் இயேசு கிறிஸ்து!

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக உலகமே கொண்டாடி மகிழ்கிறது. ஆனால் இயேசு கிறிஸ்து, பிறப்பின் மூலம் தோன்றியவர் அல்ல. கல்தோன்றி, மண்தோன்றா காலம் முதலே அவர் வாழ்கிறார். ஆம்! இயேசு உலகம் படைக்கப்படுவதற்கு முன்பாகவே பரலோகில் வாழ்ந்தவர். 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதனாக இவ்வுலகிற்கு வருவதற்கு முன்பே இருந்தார்.

அவர் இல்லாதிருந்த காலமே இருந்ததில்லை. அவர் இல்லாதிருக்கப்போகும் காலமும், இனி இருக்கப்போவதில்லை. அவர் நித்திய காலமாக வாழ்பவர். அவருக்குத் தொடக்கமும், முடிவும் இல்லை. அவரது மனு அவதாரத்திற்கு மட்டுமே தொடக்கமும், முடிவும் இருக்கிறது. அவர் நித்தியமானவர்.

இத்தகைய இறைத்தன்மையை நிரம்பப்பெற்ற இயேசு கிறிஸ்து, மாட்டுக்கொட்டகையில் ஏழையாகப் பிறந்தார். ஏழையின் மகனாகவே வளர்ந்தார். சிறுவயதிலேயே அகதியானார். இயேசு கிறிஸ்து சிறு குழந்தையாக இருக்கும் போது, அவரை கொலை செய்வதற்காக, எரோது அரசன் சின்னஞ்சிறிய பிள்ளைகளை எல்லாம் கொடூரமாக கொலை செய்தான். அப்போது இயேசுவின் வளர்ப்புத் தந்தையும், இவ்வுலகத் தாயும் அவரை எடுத்துக்கொண்டு, எகிப்து நாட்டிற்கு அகதிகளாகச் சென்றனர்; (மத்2:1317). அகதியாய் இருப்பதன் அவலத்தையும் அவர் அறிவார். அலகையின் சோதனையில் சிக்கி, 40 நாட்கள் உணவருந்தாமல் இருந்து, பசியின் கொடுமையை புரிந்துகொண்டார்.

நண்பர்களால் கைவிடப்படு வதன் வேதனையை அவர் அறிவார். அவரோடு ஒன்றாக இருந்து உண்டு குடித்த, அவரது சீடர்களில் ஒருவன் அவரைத் தெரியாதென மறுதலித்தான். இன்னொரு சீடன் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரைக் காட்டிக்கொடுத்தான். அவருக்கு ஆபத்து வந்த வேளையில் அவரிடம் நன்மை பெற்றவர்கள் பலர் அவரை கொலைசெய்யும்படி கூக்குரலிட்டனர். நன்றியற்றவர்களின் நன்றியற்ற தன்மையையும், நண்பர்களால் கைவிடப்படுவதன் வேதனையையும் இயேசு நன்கு அறிவார்.

மனக் காயங்கள் உள்ளங்களில் மாறாத வடுக்களை ஏற்படுத்தி விடுவதுண்டு. இயேசு கிறிஸ்துவும்; காயப்பட்டவர். எனவே மனக் காயத்தின் வேதனையும் அவர் அறிவார். அவர் காயப்பட்டவர் மட்டுமல்ல, காயங்களை குணமாக்குகிறவராகவும் இருக்கிறார்.

அவர் பொய் குற்றம் சாட்டப்பட்டார் (லூக் 23:4), (லூக் 23:1415) பொய் குற்றச்சாட்டுகளுக்கு, விமர்சனங்களுக்கு உட்படுவதன் வேதனையை அறிந்திருந்தார். பலவிதமான பொய் குற்றச்சாட்டுகளை அவர் மேல் சுமத்தி, அவரை சிறைப்பிடித்தனர். செய்யாத தவறுக்காக சிறையில் இருப்பதன் வேதனையையும் அவர் அறிந்திருக்கிறார்.

நம்மில் எவருமே அவமானப்பட விரும்புவதில்லை. நாம் ரகசியமாகச் செய்த தவறுகள் கூட, மற்றவர்களுக்குத் தெரிந்தால் அவமானப்பட வேண்டுமே என நாம் அவற்றை மூடி மறைக்கிறோம். இயேசு கிறிஸ்துவோ தவறு என்று ஒன்றைக்கூட செய்யவில்லை. ஆனாலும் அவரை அவமானப்படுத்தினார்கள்.

அவர் பிறந்த நோக்கம் தன்னிகரற்றது; தனித்துவமானது. இந்த உலகத்தில் அநேக மகான்களும், மதத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் பிறந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே வாழ்வதற்காகப் பிறந்தவர்கள். ஆனால் மரிப்பதற்காகவே பிறந்தவர் இயேசு கிறிஸ்து.

அந்த காலத்தில் பாலஸ்தீனாவில் பாவம் செய்தவர்கள், ஓர் ஆட்டுக்குட்டியை எடுத்து அதன் மேல் கைகளை வைத்து, தமது பாவங்களை அதன் மேல் சுமத்தி, பிறகு அந்த ஆட்டுக் குட்டியைக் கொலை செய்வதுண்டு. பாவத்தை சுமத்துகிற மனிதனுடைய பாவங்களை, அந்த ஆடு சுமந்து அந்த மனிதனுக்குப் பதிலாக மரிப்பதுண்டு. இயேசு கிறிஸ்து.. ஒரு மனிதனுடைய பாவத்தையல்ல, முழு உலக மனிதருடைய பாவத்தையும் சுமந்து முழு மனிதருக்காகவும், மரிப்பதற்காகவே மனிதனானார். எனவேதான் யோவான் ஸ்நானகன், இயேசுவைப் பார்த்து, ‘இதோ.. உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி (யோவான் 1:29)’ என்றார்.

இயேசு இவ்வுலகிற்கு வந்த ஒரு முக்கிய காரணம் எனக்காகவும், உங்களுக்காகவும் (மதம், இனம், குலம் கடந்து அனைவருக்காகவும்) மரிப்பதற்காக.

‘நாம் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த அன்பை விளங்கப்பண்ணினார் (ரோமர் 5:8)’ உங்களுக்காக உயிரையே கொடுக்கும் அளவிற்கு உங்களை நேசிக்கிறார். உங்கள் பாவங்களைத் தன்மேல் ஏற்று அதற்கான தண்டனையை அவர் அனுபவித்தார். ஒருவர் செய்யும் தவறுக்கு, இன்னொருவர் அதற்கான தண்டனையை ஏற்று சிறைக்குச் செல்வது போல, நானும் நீங்களும் செய்த பாவங்களுக்கான தண்டனையை ஏற்று, இயேசு சிலுவையில் மரித்தார். எனவே தான் பைபிள் ‘மெய்யாகவே அவர் (இயேசு) நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களை சுமந்தார். நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் (பாவங்கள்) அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தம் நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் (ஏசா 53:45)’ கூறுகிறது.

கிறிஸ்துவின் பிறப்பு.. மானிட மக்கள் பாவத்தில் இருந்து விடுதலை பெறுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டது. அதைத்தான் இந்த பைபிள் வசம் உணர்த்துகிறது. இதனைப் புரிந்து ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாக, நாம் அனைவரும் உண்மையான சமாதானத்துடன் வாழ்வோம்.