எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வெளிநாட்டு நீதவான்கள் தேவையில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கப் பொறிமுறைமை குறித்த செயலணியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நீதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், இந்த நாட்டின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வெளிநாட்டு நீதவான்களின் ஒத்துழைப்பு அவசியமில்லை. அவ்வாறு வரும் வெளிநாட்டு நீதவான்களை ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை.
நாம் வெளிநாட்டு நீதவான்களை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. குறித்த செயலணியின் அறிக்கை இன்னும் ஆராயப்படவில்லை.
எவ்வாறாயினும், சர்வதேச நீதவான்களை பங்கேற்கச் செய்வதில்லை என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக அமைந்துள்ளது. எமது அரசியல் அமைப்பில் அதற்கான சந்தர்ப்பம் கிடையாது.
எமது நாட்டின் நீதிமன்றை இழிவுபடுத்தவோ, குறைத்து மதிப்பிடவோ முடியாது. உலகின் எந்தவொரு நாட்டைச் சேர்ந்த நீதவான்களுக்கும் தரம் குறைந்து போகாத சிறந்த நீதவான்கள் இலங்கையில் இருக்கின்றார்கள்.
எனவே, எமது நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வெளிநாட்டு நீதவான்களின் ஒத்துழைப்பு அவசியமில்லை. அதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.