சீனாவில் காற்று மாசுபாடால் நிறம்மாறும் புல்லட் ரயில்கள்!

சீனாவின் பல பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்தது. இதனால் அந்நாட்டு அரசால் இரண்டு முறை உயர் எச்சரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள்  தற்காலிகமாக மூடப்பட்டன.
தற்போது மீண்டும் காற்று மாசுபாடு விஸ்வரூபம் எடுத்துள்ளது. பீஜிங் உள்ளிட்ட 72 நகரங்களில் பனிப்புகை சூழ்ந்துள்ளது. இது குறித்து அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.
காற்றுமாசுடன் கூடிய பனிப்புகை காரணமாக முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
இந்த காற்று மாசுபாடு அங்கு இயக்கப்படும் ரெயில்களையும் விட்டு வைக்கவில்லை. முழுவதும் வெள்ளை நிறத்தில் இயக்கப்பட்டு வந்த புல்லட் ரெயில்கள், காற்று மாசுபாட்டின் காரணமாக தற்போது பழுப்பு நிறத்தில்  மாறியுள்ளன.
அந்தக் காட்சியை அங்குள்ளவர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
சீனாவில், சுத்தமான காற்று விலைக்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.