சாதனைக்கு வயது தடை இல்லை’ என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில் 105 வயது முதியவர் ஒருவர் 1 மணி நேரத்தில் 22.5 கி.மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். அவரது பெயர் ராபர்ட் மார்சண்ட். இவர் பிரான்சை சேர்ந்தவர். இவர் பாரீஸ் அருகே ஒரு விளையாட்டு மைதான ஓடு தளத்தில் சைக்கிள் ஓட்டினார்.
1 மணி நேரத்தில் இவர் 22.5 கி.மீட்டர் தூரம் ஓட்டி சாதனை படைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இவர் தனது 102 வயது வயதில் 26.9. கி.மீட்டர் தூரம் வரை சைக்கிள் ஓட்டியுள்ளார். 1911-ம் ஆண்டில் பிறந்த இவர் தனது 14 வயதில் மோட்டார் சைக்கிள் ஓட்ட பழகினார்.
தனது 67 வது வயதில் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டினார். 2012-ம் ஆண்டில் அதாவது தனது 100-வது வயதில் 4 மணி 17 நிமிடம் 27 வினாடிகளில் 100 கி.மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்தார். அதற்காக 6 மாதம் பயிற்சி மேற்கொண்டார்.