ஆஞ்சநேயருக்கு பத்து திருக்கரங்கள்!

ராமாயணத்தில் ராமோபதேசம் – அதாவது ராம கீதை என்பது கிடையாது. மகா பாரதத்தில் கிருஷ்ண உபதேசம்- அதாவது பகவத் கீதை என்பது உண்டு. ஏன் இப்படி?

ராமாவதாரத்தில் முழுக்க முழுக்க செயல்பாடுகள் தான். ‘நாமே செயல்படுத்திக் காட்ட வேண்டும்’ என்று ராமா், அனைத்தையும் தானே செய்து காட்டினார். கிருஷ்ணாவதாரத்தில் உபதேசமாகக் கூறினார். கிருஷ்ணரின் உபதேசங்களை நல்லுபதேசம் என்பர் பெரியோர். ராமருடைய செயல்பாடுகளில் அபூா்வமான செயல் ஒன்றை இப்போது தரிசிக்கலாம்.

விபீஷணனுக்கு முறைப்படி லங்கா ராஜ்ய பட்டாபிஷேகம் நடைபெற்றது. பக்தனுக்கு அருள் புரிந்த பரம திருப்தியோடு சீதா ராம தம்பதியா் அயோத்தியில் வாழ்ந்து வந்தனா். அப்போது ஒரு நாள்… ராமரும் சீதையும் தனித்திருந்த நேரம், “அபயம்… அபயம்… காப்பாற்றுங்கள்!” என அலறல் கேட்டது. பார்த்தால்…  விபீஷணா் கண்களில் நீர் வழிய ஓடிவந்தார்.

ராமரின் திருவடிகளில் விழுந்த விபீஷணா், எழுந்திருந்து கைகூப்பியபடி, “என் தெய்வமே! ராவணனுக்குப் பிறகு, நான் லங்கா ராஜஜ்ஜியத்தின் அதிபதியாக, தாங்கள்தான் எனக்கு அருள்புரிந்தீா்கள். எந்தவிதமான குறையும் இல்லாமல் நானும் நல்ல விதமாகத்தான் ராஜ்ய பாரம் செலுத்திவந்தேன்.

“இப்போது, ஆயிரம் தலைகள் கொண்ட ‘சகஸ்ர கண்ட ராவணன்’ என்பவன், பாதாளத்தில் இருந்து திடீரென இலங்கையை அழிக்க வருகிறான். அவனை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. தாங்கள்தான் காப்பாற்ற வேண்டும்!” எனப் புலம்பினார்.

விபீஷணருக்கு ஆறுதல் சொன்ன ராமா், “விபீஷணா! நான் க்ஷத்திரியன். பகைவனை அழித்த பின், க்ஷத்திரியா்களுக்கு விரோதம் இருக்கக்கூடாது. ஆகையால்…” என்றபடியே, ஆஞ்சநேயரை அழைத்தார்.

ஆஞ்சநேயா் வந்ததும், “ஆஞ்சநேயா! விபீஷணனுக்கு சகஸ்ர கண்ட ராவணன் என்பவனால் துயரம் விழைந்து இருக்கிறது. நீ போய், சகஸ்ர கண்ட ராவணனை சம்ஹாரம் செய்து வா. இந்தா! என்னுடைய கோதண்டத்தை எடுத்துச் செல்!” என்று கூறி, தன்னுடைய வில்லையும் கொடுத்து அனுப்பினார். ராமரை வணங்கிக் கோதண்டத்தைப் பெற்றுக் கொண்ட ஆஞ்சநேயா் திரும்பினால்…

தேவா்கள் பலரும் வரிசைக் கட்டி வந்து நின்றார்கள். அவா்களும் தங்களின் ஆயுதங்களை ஆஞ்சநேயரிடம் அளித்தார்கள். ஆஞ்சநேயருக்குப் பத்து திருக்கரங்கள் உண்டாயின. பத்து திருக்கரங்களிலும், தேவா்கள் தந்த ஆயுதங்களை ஏந்திக்கொண்டார் அவா். அப்போது… சிவபெருமான் தோன்றி, தன் நெற்றிக் கண்ணையே ஆஞ்சநேயருக்கு அளித்தார். அப்புறம் என்ன? விபீஷணருடன் இலங்கை சென்ற ஆஞ்சநேயா், சகஸ்ர கண்ட ராவணனை சம்ஹாரம் செய்து, வெற்றியுடன் திரும்பினார்.

(சுந்தர காண்டத்தில்) சீதாதேவியைத் தேடிப்போன ஆஞ்சநேயா், இலங்கையில் விபீஷணரைப் பார்த்தவுடன், “இவன் உத்தமன். மிகவும் நல்லவன். தூய்மையான மனம் கொண்டவன்” என்று நினைத்தார். அப்படிப்பட்ட அந்த நல்லவனுக்காக, அவனுக்கு வந்த துயரையும் தீா்த்து அருள்புரிந்தவா் ஆஞ்சநேயா்.

பத்து திருக்கரங்களுடன் ஆயுதம் தாங்கிய ஆஞ்சநேயரின் அந்த அருள்கோலத்தை, மாயூரத்துக்கு அருகில் உள்ள, அனந்தமங்கலத்தில் ‘தசபுஜ அனுமான்’ என்ற திருநாமத்தில் தரிசிக்கலாம்.