‘பைரவா’ படத்தில் விஜய் காட்சிகள் குறைப்பு

விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பைரவா’. ‘அழகிய தமிழ்மகன்’ புகழ் பரதன் இயக்கியிருக்கும் இப்படத்தை விஜயா வாஹினி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் விஜய் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாகக் கூறிய, எடிட்டர் பிரவீன் படத்தின் நீளத்தைக் குறைக்குமாறு இயக்குநர் பரதனைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். குறிப்பாக விஜய் நடித்துள்ள காட்சிகளில் சிலவற்றை நீக்க நினைத்த எடிட்டர் பிரவீன், விஜய்யிடம் இதுகுறித்து கேட்க தயங்கியுள்ளார். பின்னர் ஒருவழியாக விஜய்யிடம் இதுகுறித்து பேசியுள்ளார்.

அதற்கு நடிகர் விஜய் “திரையில் படம் சிறப்பாக வர தேவையானவற்றை செய்யுங்கள். நமக்கு படம்தான் முக்கியம்” என்று கூறியிருக்கிறார். விஜய்யின் பதிலைத் தொடர்ந்து, தற்போது படத்தின் நீளத்தைக் குறைக்கும் வேலையில் எடிட்டர் பிரவீன் இறங்கியிருக்கிறார். பொங்கல் விருந்தாக ‘பைரவா’ வரும் ஜனவரி 12-ம் தேதி வெளியாகிறது.