நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி விவரம் வருமாறு,
“இந்த காலத்து காதல் செல்போன்-வாட்ஸ்அப் யுகத்துக்கு மாறி, காதலர்கள் எப்போதும் தொடர்பில் இருக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது. ஆனால் இந்த தொழில்நுட்ப வசதிகள் இல்லாத பழைய காலத்து காதல் எப்படி இருந்தது என்பதை எனது தந்தை கமல்ஹாசன் சொல்லி கேள்விப்பட்டபோது வியப்பாக இருந்தது.
போன் வசதி இல்லாத அந்த காலத்து காதலர்கள் சந்தித்து பேசுவது சுலபமானதாக இருக்கவில்லை. எப்போதாவது ஒருமுறைதான் அவர்கள் பார்த்துக்கொள்ள முடியும். நேரில் பேசித்தான் காதலை வளர்த்தார்கள். அருகருகே நின்று பேசும்போது ஒருவருக்கொருவர் அன்பான வார்த்தைகளை பரிமாறிக்கொள்வார்கள். அப்போது அவர்களின் முகபாவங்கள் மாறுவதையும் வித்தியாசமான உணர்வுகளை வெளிப்படுத்துவதையும் நேரில் பார்ப்பது அலாதியான சுகமானது.
உயிரோட்டமான காதலாகவும் அது இருந்தது. அவற்றை எல்லாம் பார்த்துதான் நிறைய காதல் கதைகள் உருவானதாக என் தந்தை கூறி இருக்கிறார். அதன்பிறகு வீட்டில் இருக்கும் ‘லேண்ட்லைன்’ போனுக்கு காதல் மாறியது. போனில் மணி அடிக்கும்போது அதை அம்மாவோ, அப்பாவோ எடுத்து விடக்கூடாது என்று மனம் பதைபதைக்கும். பயமும் இருக்கும்.
எப்போதும் போன் பக்கத்திலேயே காதலனும் காதலியும் போன் அழைப்புகளை எதிர்பார்த்து காத்து இருப்பார்கள். அது சுவாரஸ்யமானதாக இருக்கும். அது ஒரு காலம். செல்போன், வாட்ஸ்-அப் காதலுக்கு மாறி உள்ள இந்த காலத்து இளைஞர்கள் பழைய காலத்தில் இருந்த அந்த ஜீவனுள்ள காதலை இழந்து விட்டார்கள் என்றுதான் நான் சொல்லுவேன்.
எனக்கு பழைய காலத்து காதல்தான் பிடித்து இருக்கிறது.”
இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.