ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்குச் செல்ல வாய்ப்புள்ளது என்பது குறித்து சட்ட நிபுணர்கள் கூறியதாவது,
நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய உள்ளதா அல்லது குன்ஹாவின் தீர்ப்பை ஏற்கிறதா என்பது மட்டுமே இப்போதுள்ள ஒரே எதிர்பார்ப்பு.
ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்பது தான் வழக்கின் முகாந்திரம்.
அந்த வகையில், முக்கிய குற்றவாளி என்ற இடத்தில், அவரது பெயர் இடம் பெற்றிருக்கிறது. அவர் இறந்து விட்டதால் இவ்வழக்கு கைவிடப்படும் வாய்ப்பு அதிகம்.
ஏனெனில், வழக்கில் பிற குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாதவர்கள்.
அதேநேரத்தில், ஊழல் தடுப்புச் சட்டம் 1988ல் மட்டுமின்றி இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 120 பி மற்றும் 109 ஆகியவற்றின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
குன்ஹாவின் தீர்ப்பு உறுதி செய்யப்படும்பட்சத்தில் பிற குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வாய்ப்புள்ளது. எந்தத் தீர்ப்பு ஏற்கப்பட்டாலும், வழக்கில் உள்ள சொத்துக்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை.
இதனால், ஜெயலலிதா பெயரில் உள்ள சொத்துக்கள், அவர் உயில் எழுதி வைத்துள்ளவருக்கு போய்ச் சேரும்.
எதுவும் எழுதாதபட்சத்தில், அவருக்கான ரத்த உறவாக உள்ள அவரது அண்ணனின் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோரே சட்டரீதியாக இவற்றைப் பெறும் உரிமை உடையவர்களாகின்றனர்.
ஜெயலலிதா பெயரில் உள்ள பங்குகளும் இவர்களையே சேரும். உதாரணமாக, கோடநாடு எஸ்டேட்டில் 50 சதவீத பங்கு, ஜெயலலிதா பெயரில் தற்போது இருந்தால், அதில் இவர்களிருவருக்கும் சரி பாதி பங்கு கிடைக்கும். ஆனால், நிலமாக பிரித்துக் கொள்ளும் வாய்ப்பில்லை.
எஸ்டேட் பெயரில் கடன் இருந்தால், அதில் பாதியை இவர்கள் ஏற்க வேண்டியிருக்கும். இல்லாவிட்டால், எஸ்டேட் மதிப்பில் பாதியை இவர்களுக்கு சக பங்குதாரர் செலுத்த வேண்டும்.
ஒரு வேளை, தனது சொத்துக்களை ஏதாவது ஓர் அறக்கட்டளைக்கு எழுதி வைத்திருக்கும்பட்சத்தில், இந்த சொத்துக்களின் மூலமாக வரும் தொகை, அறக்கட்டளையின் அறப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.
தனி நபருக்கு இவர் ஏதாவது எழுதி வைத்திருந்தால், அதை சட்டரீதியாக பலர் எதிர்க்கவும் வாய்ப்புண்டு. எனவே, அந்த உயிலை நல்ல மனநிலையில் தான் எழுதினார் என்பதை நீதிமன்றத்தில் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. அவ்வாறு செய்தால் மட்டுமே அந்தச் சொத்தை அடைய முடியும்.
சமீபத்தில், மூன்று தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் கட்சி வேட்பாளர்களுக்கான அங்கீகாரக் கடிதத்தில் ஜெயலலிதாவின் கைநாட்டு மட்டுமே இடம் பெற்றிருந்தது, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
நன்கு கையெழுத்துப் போடும் ஒரு நபர், கைநாட்டு வைப்பது இத்தகைய சந்தேகங்களை எழுப்புவது இயல்பான விஷயமே.
ஒரு வேளை, உயிலிலும் ஜெயலலிதாவின் கைநாட்டு இருந்தால், அதை வைக்கும்போது, அவர் மயக்க நிலையில் இல்லை என்பதையும், நல்ல மனநிலையில் இருந்தார் என்பதையும் நீதிமன்றத்தில் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு யாருடைய பெயரில் உயில் எழுதப்பட்டுள்ளதோ அவர்களுக்கு இருக்கிறது.
ஜெயலலிதாவின் உயிலைப் பொறுத்தே இவை அனைத்தும் முடிவு செய்யப்படும் என்று சட்ட நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சொத்துக்கள், 1991-19996 வரையிலான ஐந்தாண்டு காலகட்டத்தில் ஜெ., முதல் முறை முதல்வராக இருந்தபோது, அவரது வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துக் கள் என்று 30-4-1996அன்று கணக்கிடப் பட்டவை.
அதன் பின், 2001-2006, 2011-2016 மற்றும் 2016 மே -செப்டம்பர் 22 ஆகிய கால கட்டங்களில் (பன்னீர் செல்வம் முதல்வராக இருந்த காலகட்டம் தவிர்த்து) ஐந்து முறை முதல்வராக இருந்துள்ளார் என்பது நினைவு கூரத்தக்கது.